சுரேஷ் குமார் கொலை.. பிடிபட்ட 2 பேர்.. பரபரப்பான பின்னணித் தகவல்கள்..!
சென்னை: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் குமார் கொலை குறித்த பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலையில் பழனியைச் சேர்ந்த சிலருக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் கடை வைத்து நடத்தி வந்த சுரேஷ் குமார், சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கடையை பூட்டிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் பின்னால் இருந்து சரமாராக வெட்டினர். பின்னர் அவரது மேல் ஏறி அமர்ந்து கொண்டு முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் கொலையில் அல் உம்மா அமைப்பினருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
சுரேஷ்குமார் கொலை தொடர்பாக துப்பு துலக்குவதற்காக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இணை கமிஷனர் சண்முகவேலின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் இத்தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாடி சுரேஷ்
இந்து முன்னணி அமைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த சுரேஷ்குமார் பாடி சுரேஷ் என்று அழைக்கப்படுவார். கோவில் நிலங்கள் எந்த பகுதியிலாவது ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அங்கு உடனே சென்று விடுவார் சுரேஷ்குமார். அதே போல இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் தெருமுனை கூட்டங்களிலும் ஆவேசமாக பேசி வந்துள்ளார்.

மீஞ்சூர் பேச்சு எமனானது
மீஞ்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் சுரேஷ்குமார் பேசிய பேச்சுக்களே அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டதாக கூறப்பட்டது.

சிடி பேச்சு வைத்து பழி தீர்ப்பு
இந்த பேச்சுக்களை சி.டி.யாக தயாரித்து ஒரு கும்பல் வெளியிட்டுள்ளது. எனவே அவரது வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமலேயே எதிரிகள் சுரேஷ்குமாரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். இது தொடர்பாக உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட 100 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பழனி வாலிபர்கள்
இதற்கிடையே தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் பழனியை சேர்ந்த 2 வாலிபர்களுக்கு இக்கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

சென்னையில் வைத்து விசாரணை
இதையடுத்து பழனிக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக நபர்கள் இருவரையும் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்தனர். ஜெ.ஜெ. நகர் பகுதியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருக்கும் போலீசார் 2 பேரிடமும் அங்கு வைத்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

கொலையாளிகளுக்கு உதவியதாக சந்தேகம்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசில் சிக்கியுள்ள 2 பேரும் கொலையாளிகளாக கருதப்படும் தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையிலேயே அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

3 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்கள்
இதற்கிடையே கொலையாளிகள் 3 பேரின் வரைபடங்களை கம்ப்யூட்டர் உதவியுடன் போலீஸார் வரைந்து வருகின்றனர். விரைவில் அது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications