மதுரை: அரசு பஸ்களில் குண்டு வெடிப்பு: 3 பேர் கைது- பேட்டரி, வெடிமருந்து பறிமுதல்
மதுரை: அரசு பேருந்துகளில் 'டைம் பாம்' வெடித்த வழக்கில், இமாம் அலியின் கூட்டாளி சுல்தான் பாட்ஷா உட்பட 3 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் பேட்டரி, வெடிமருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்கில் சிக்கிய இமாம்அலியின் கூட்டாளிகள் 'போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 26ம் தேதி, சிறைக்காவலர்கள், கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், இந்து அமைப்பினர் கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கைதிகள், திருச்சி, சேலம், வேலூர், கோவை, மதுரை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே மதுரை ஆரப்பாளையத்தில் அரசு பேருந்துகளில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெடிகுண்டுகள் வெடித்தன. போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரின் சிறை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, குண்டு வைத்திருக்கலாம் என போலீசார் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக ஞாயிறன்று இரவு 7 முதல் 12மணி வரை, உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் போலீசார், வில்லாபுரம் ஹவுசிங் போார்டு காலனி சுல்தான்பாட்ஷா மற்றும் நெல்பேட்டை அப்துல்சித்திக், சுபாகான் என்ற சுபாணி, ஜியாவுதீன், அல்ஆஷிக்முகமது வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் பேட்டரிகள், பட்டாசு வெடிமருந்து, பைப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து ஐந்து பேரையும் அழைத்துச் சென்று திங்கட்கிழமை மாலை வரை போலீசார் விசாரணை நடத்தினர்.

இமாம்அலி நினைவு நாளான செப்.,29ம் தேதி, அமைதி பேரணி செல்வதாக கூறி 50 பேருடன் சுல்தான்பாட்ஷா கைதானார். பின் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதி மதுரை அரசு பேருந்துகளில் குண்டு வெடித்தது தொடர்பாக இந்நிலையில் சுல்தான் பாட்ஷா, 28, சுபா கான், 30, ஜியாவுதீன், 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2 ல் நேற்றிரவு ஆஜர்படுத்தினர். நவம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பால்பாண்டி (பொறுப்பு) உத்தரவிட்டார்.
இவர்களில் சுல்தான்பாட்ஷா, இமாம்அலியை 2002ம் ஆண்டு திருமங்கலத்தில் மீட்டுச் சென்றவர்களில் ஒருவர். தற்போது, மதுரை தெற்கு வெளி வீதியில் பிரியாணி கடை நடத்துகிறார். கட்சி ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், அதில் இருந்து விலகி தற்போது 'இஸ்லாமிய ஜனநாயக முன்னணி' அமைப்பில் உள்ளார்.
பொய் வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்ததாக, அவர்களின் குடும்பத்தினர் , நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, பின் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications