ஓபிஎஸ்சின் தலையெழுத்தை மாற்றிய மூன்று தவறுகள்.. அதிமுகவை கோட்டை விட்டது எங்கே?
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் செய்த மூன்று தவறுகள் தான் அவரது தலையெழுத்தையே மாற்றி உள்ளன. அந்த மூன்று தவறுகள் என்ன என்பது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதை பார்ப்போம்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றத்தில் அதற்கான வழக்குகளை தொடுத்து அதிலும் அடுத்தடுத்து தோற்றார். தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே சாதகமாக நடந்துள்ளது.
இது எப்படி நடந்தது. ஓ பன்னீர்செல்வம் செய்த தவறுகள் என்ன? அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் பின்னடைவை சந்தித்தது எங்கு என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுவது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
முதல் தவறு தர்மயுத்தம்: ஒரு வேளை தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால், சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், மீண்டும் ஓ பன்னீர்செல்வமே முதல்வராக ஆகி இருப்பார். ஜெயலலிதா எப்படி முதல்வர் பதவியை ஓ பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிட்டு சென்றாரோ அதுபோல் சசிகலாவும் சென்றிருக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இரண்டாவது தவறு பொதுக்குழு அங்கீகாரம்: எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவை உடனே கூட்டி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி சாதூர்யமாக செயல்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானத்தை நிராகரிக்க செய்தார்.
மூன்றாவது தவறு மக்கள் மன்றத்திடம் போகாதது: பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் தன்னை நிராகரிக்கிறார்கள் என்ற போது உடனே மக்கள் மன்றத்திற்கு போகாமல் நீதிமன்றம் போனது தான் ஓபிஎஸ் செய்த 3வது தவறு. 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கிய பிறகு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது எம்ஜிஆரிடம் சிலர் "நாம் போட்டி பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் போடுவோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம்" என ஆலோசனை கூறியருக்கிறார்கள். ஆனால் அப்படியொரு முடிவை எம்.ஜி.ஆர் எடுக்கவில்லை. உடனே அ.தி.மு.கவை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் அதாவது 19 73 ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நான்கு இடைத்தேர்தல்களில் வென்றார். 1977ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார்.

எம்ஜிஆர் மட்டுமல்ல, இந்திராகாந்திக்கும் நடந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து 1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தியை நீக்கினர். அவரும் தேர்தல் மூலமாக நிரூபித்துவிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவராக மாறினார். 1989களில் ஜெயலலிதாவும் மக்கள் மன்றத்தில் நிரூபித்து தான் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
எனவே எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட உடன், உடனடியாக ஆதரவு வட்டத்தை அதிகரித்து, தனது தலைமையில் பலப்படுத்தி, இடைத்தேர்தல்களில் நின்று வென்று ஜெயித்து மக்கள் மன்றத்தில் நிரூபித்து இருந்தால், கட்சி அவர் பக்கம் வந்திருக்கும் ஆனால் ஓபிஎஸ் அப்படி செய்யவில்லை. மாறாக நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து வழக்குக்கு மேல் வழக்கை போட்டார். ஆனால் இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை காரணம் சட்டத்தின் நான்கு முனைகளுக்குள்தான் நீதிமன்றங்கள் செயல்பட முடியும் என்பதால் ஓபிஸ்க்கு சாதகமாக இதுவரை எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications