திருச்சி கட்டிட விபத்தில் ஒருவர் பலி: கட்டிட உரிமையாளர் கைது
திருச்சி: திருச்சியில் 40 ஆண்டுகால கட்டிடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்டிட உரிமையாளர் ஜலாலுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி-மதுரை சாலை நத்தஹர்வலி தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர் அதே பகுதியில் 40 ஆண்டுகள் பழைமையான வீட்டை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.

பின்னர் வீட்டின் மேல் 3 தளங்களில் வீடுகளை கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மராமத்து பணிகளை மேற்கொள்ள ஜலால் தொடங்கியதால் வீட்டின் 2, 3-வது தளங்களில் இருந்தவர்களை காலி செய்து அனுப்பிவிட்டு, முதல் தளத்தில் மட்டும் வாடகைதாரர்கள் குடியிருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் சுவரில் திடீர் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் கட்டிடமே பக்கவாட்டில் சாய்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பஷீர் அகமது என்பவர் பலியானார்.
மேலும் முதல் தளத்தில் சிக்கியிருந்த 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கட்டிட உரிமையாளர் ஜலாலுதீனை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications