கணக்கு போட்டு காய் நகர்த்திய ஓ.பி.எஸ்.: சசி அணியில் இருந்து தாவும் 5 அமைச்சர்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வரும் 8ம் தேதி நடத்தப்பட உள்ள உண்ணாவிரதப் போராட்த்திற்கு முன்பு 5 அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ. பன்னீர்செல்வம் அணி முயற்சி செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியாக உள்ளது. இதில் ஓ.பி.எஸ். அணிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வென்றார்.

கூவத்தூர்
கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து நேரடியாக சட்டசபைக்கு கொண்டு வந்ததால் பழனிசாமி வென்றதாக பேச்சு உள்ளது.

ஓ.பி.எஸ். அணி
ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் மைத்ரேயன் தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவர்கள் பிரணாபிடம் மனு அளித்தனர்.

உண்ணாவிரதம்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஓ.பி.எஸ். அணி சார்பில் வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அமைச்சர்கள்
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்பு சசிகலா அணியில் உள்ள 5 அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வடக்கு மண்டலத்தில் 2 அமைச்சர்களும், தெற்கு மண்டலத்தில் 3 அமைச்சர்களும் ஓ.பி.எஸ். அணிக்கு வர தயாராகிவிட்டார்களாம். ஓ.பி.எஸ். அணிக்கு வருவதாக வாக்குறுதியும் அளித்துள்ளார்களாம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் சர்வாதிகாரி போன்று செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளாராம். அவரை கேட்காமல் தினகரன் எதையுமே செய்ய மாட்டாராம்.

அதிமுக
தினகரனால் விரைவில் கட்சி நாசமாகிவிடும் என்று கூறப்படுகிறது. தினகரனின் செயல்களால் கட்சியினர் கடுப்பாக ஆக அதை பயன்படுத்தி பலரை தங்கள் பக்கம் இழுக்க காத்திருக்கிறதாம் ஓ.பி.எஸ். அணி. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பட்ஜெட்டை நிறைவேற்றவிடாமல் செய்தால் அரசு கவிழும் என்று கணக்குபோட்டு செயல்படுகிறதாம் ஓ.பி.எஸ். அணி.












Click it and Unblock the Notifications