மதுரை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை: கொடைக்கானலில் உடல் கண்டுபிடிப்பு
மதுரை: மதுரையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரின் உடல் கொடைக்கானல் மலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
மதுரை சின்னசொக்கிகுளம் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஜமால்முகம்மது (60), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், சில நாள்களுக்கு முன்பு மாயமானார். இது தொடர்பாக, தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஜமால் முகம்மது, மர்மக் கும்பலால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் இருவரை போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந் நிலையில், இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் சங்கர் (28) என்பவர், மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சரணடைந்த சங்கர், தொழிலதிபர் ஜமால் முகம்மதுவை கொடைக்கானல் பகுதியில் கொலை செய்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜமால் முகம்மது ரூ.2 லட்சம் தர மறுத்ததால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடைக்கானலில் கொலை செய்து பள்ளத்தில் உடலை வீசி விட்டதாக போலீசில் சங்கர் தெரிவித்துள்ளார்.
சங்கரின் வாக்குமூலத்தை அடுத்து ஜமால் முகம்மதுவின் உடலை தேடும்பணியில் தல்லாகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசார் கொடைக்கானல் சென்றனர். மயிலாடும்பாறை பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் ஒரு ஆண் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த உடல் அருகே ஜமால் முகம்மதுவின் ஓட்டுநர் உரிமம் கிடந்தது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் இது ஜமால் முகம்மதுவின் உடல்தான் என்று உறுதிபடுத்தினர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணுடன் சென்றவர்
ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மது கடந்த 31-ந்தேதி திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்ற பெண்ணுடன் அருப்புக்கோட்டைக்கு சென்றுள்ளார். பின்னர் காரில் திரும்பியபோது ஒரு கும்பல் ஜமால் முகம்மதுவை கடத்தி சென்றுள்ளது.
கடத்தலுக்கு உடந்தை
கடத்தல் கும்பலில் ஜமால் முகம்மதுவின் உதவியாளராக இருந்த சங்கர் மற்றும் சித்திக், மாரியப்பன், மார்த்தாண்டன், கணேசன் உள்ளிட்ட மேலும் சிலர் இருந்துள்ளனர்.
பத்திரப்பதிவு
அவர்கள் ஜமால் முகம்மதுவை மிரட்டி பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். பின்னர் அவரது பெயரில் இருந்த சில சொத்துக்களை பத்திரப் பதிவும் செய்துள்ளனர்.
கொலை செய்த கும்பல்
இதே நேரத்தில் கொடைக்கானலுக்கு கடத்திசென்ற கும்பல் ஜமால் முகம்மதுவை கொலை செய்து அவரது உடலை பள்ளத்தில் வீசி விட்டு வந்து விட்டனர்.
பெண்ணும் கைது
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் மற்றும் பூங்கொடி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். சிறையில் உள்ள சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கொலை வழக்காக மாற்றம்
ஜமால் முகம்மது காணாமல்போனது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரை தல்லாகுளம் போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சித்திக் உள்ளிட்ட கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications