79 திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் இன்றுடன் முடிகிறது- நாளை முதல் சட்டசபையில் அனல்பறக்கும்?
சென்னை: சட்டசபையில் இருந்து 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்பதால் சபையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் கடந்த 17-ந் தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் குணசேகரன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்து விமர்சித்தார்.

இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உட்பட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டு ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பினர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுநாள் தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 19-ந் தேதி போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.
பின் 22-ந் தேதி முதல் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்தைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இன்றுடன் முடிவடைகிறது.
நாளைய சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்பர். இதனால் எஞ்சிய சட்டசபை கூட்டத் தொடரில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications