சுவாதி கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்த 'சூளைமேடு' மேன்சன்
சென்னை: சுவாதி கொலையில் போலீசுக்கு தீராத தலைவலியாக இருந்த கொலையாளியை தமிழகம், கர்நாடகா என எட்டு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கடைசியில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து 8 நாட்கள் விடைதெரியாமல் தேடி வந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது.,
கடந்த ஜூன் 24ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. வெட்டிக்கொன்ற கொலையாளி சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்றதோடு, கொலை செய்த அரிவாளை வீசிவிட்டு சென்று விட்டான்.
இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்தும், சுவாதிக்கு வந்த மொபைல் அழைப்புகள் அடிப்படையிலும், சுவாதியின் நண்பர்களிடமும், அவர் பணியாற்றிய இடத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 10 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடியதில் சுவாதி கொலையாளியைப் பற்றி விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

கொலை நடந்த அந்த நாள்
கடந்த ஜூன் 24ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொலை நடந்திருக்கிறது. 6.40 மணிக்கு சுவாதியின் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 8.45 மணிக்கு மீண்டும் ஆன் ஆகியிருக்கிறது.
சூளைமேடு ஏரியா
இதுதான் கொலைக்கு கிடைத்த முக்கிய தடயம். இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, செல்போன் ஆன், ஆஃப் செய்யப்பட்ட இடம் அனைத்துமே சூளைமேடு பகுதியில் நடந்துள்ளது தெரியவந்தது.

கொலையாளியின் வீடியோ
திட்டம் போட்டு கொலை செய்து விட்டு தப்பித்தாலும் ரயில் நிலையத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கொலையாளியை முதன்முதலாக அடையாளம் காட்டியது. அதை அடிப்படையாக வைத்தே கொலையாளியை தேடத் தொடங்கினர்.

படம் வரைந்து தேடிய போலீஸ்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் முகம் தெளிவாக இல்லாததால் ஹைதராபாத் சென்று சுவாதி கொலையாளியின் முகத்தை சற்றே தெளிவாக வரைந்து வைத்துக் கெண்டு தேடத் தொடங்கினர். சுவாதி கொலையாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது.

வீடு வீடாக விசாரணை
சூளைமேடு பகுதியில் வீடு வீடாகவும், கடைகள், மேன்சன் பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது, ஏ.எஸ் மேன்ஷனில் விசாரித்தபோது அங்கிருந்த காவலாளி மூலம் விடை கிடைத்தது.

துப்புக்கொடுத்த காவலாளி
ஏ.எஸ் மேன்ஷனில் இருந்த இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரமாகவே அந்த மேன்ஷனில் இல்லாமல் போன விஷயத்தை மேன்சன் நிர்வாகியும் உறுதி செய்தார். அவரிடம் கொலையாளியின் போட்டோவைக் காட்டிய போலீசார் அவர்தான் கொலையாளி என்று உறுதியானது.
|
அறையில் சோதனை
அந்த இளைஞர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போலீஸ், அந்த இளைஞரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். கொலையாளி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவரவே, போலீசார் அவரைப் பற்றி மேலும் விசாரிக்க நெல்லை மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் அனுப்பினர்.

சுற்றி வளைப்பு
நெல்லையில் இருக்கும் பிரதீப்குமார் தலைமையில் செயல்பட்ட குழுவினர், தென்காசிக்கு அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளியின் வீட்டை நேற்று இரவு சுற்றி வளைத்தனர். அப்போது அவர், கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முயற்சி
ராம்குமாரை உடனடியாக மீட்ட போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொலையாளிக்கு தற்போது முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கழுத்தில் 60 சதவிகிதம் அளவிற்கு காயம் இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை டூ சென்னை
செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் ராம்குமார், 22, மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர் சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டின் அருகே விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார்.

ஒருதலைக்காதல்
வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வரும் சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சுவாதி தனியாக செல்லும் போது அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சுவாதி மறுத்ததாக தெரிகிறது. எனினும் ஒருதலை காதலால் ராம்குமார், சுவாதி பின்னால் சுற்றியுள்ளார்.

கொலையில் முடிந்தது
சம்பவத்தன்றும், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வைத்து சுவாதியிடம் அவர் காதல் குறித்து பேசியுள்ளார். சுவாதி மறுக்கவே, ஆத்திரமடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

போக்கு காட்டி பிடித்த போலீஸ்
ராம்குமார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கர்நாடகாவை சேர்ந்தது என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் தென்மாவட்டத்தை சேர்ந்தது சிலர் தெரிவித்தனர். இதுவும் கொலை வழக்கில் கொலையாளியை கண்டுபிடிப்பதில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.

செல்போன் சிக்னல்
சுவாதியிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட செல்போனை வியாழக்கிழமையன்று மாலை ராம்குமார் ஆன் செய்துள்ளார் இதனையடுத்தே கொலையாளி செங்கோட்டை பகுதியில் இருப்பது உறுதியானது.

தகவல் கொடுத்த போலீஸ்
கொலையாளி நெல்லையில் இருப்பது வியாழக்கிழமை இரவே உறுதி செய்யப்பட்டாலும் கர்நாடகாவில் தேடுவது போல போக்கு காட்டி ஊடகங்களுக்கு தகவல் கொடுத்து விட்டு கடைசியில் மடக்கி பிடித்தது போலீஸ்.

சென்னைக்கு கொண்டு வர திட்டம்
ராம்குமாரின் கழுத்தில் 2 செமீ அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்கு பேசக்கூடாது என்று போலீஸ் தெரிவித்துள்ளதால் ராம்குமாரின் தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்தது ஏன் என்று அவரே கூறினால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications