இந்து முன்னணி பிரமுகர் படுகொலை – கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள்
சென்னை: சென்னை அருகே இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுரேஷ் குமார் படுகொலையால் அம்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. நேற்று பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடலை எடுத்துச் செல்லும்போது திடீரென மோதல் வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் கல்வீச்சில் இறங்கியதால் போலீஸார் நிலைமையை சமாளிக்க தடியடியில் இறங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். 40 வயதான இவர் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்ப்பேட்டை தெருவில் வசித்து வந்தார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் இருந்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை டிடிஎச் சாலையில் இவரது அலுவலகம் உள்ளது. அதில் ஒரு டெலிபோன் பூத்தும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது அலுவலகத்தை சுரேஷ்குமார் மூடிக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டித் தள்ளினர்.
இதில் உடலில் பல பகுதிகளில் வெட்டு விழுந்து சுரேஷ் குமார் துடிதுடித்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்தத் தகவல் பரவியதும் இந்து முன்னணியினர் திறண்டு வந்தனர். சுரேஷ் குமாரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் உடல் மண்ணூர் பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடையடைப்பு - வன்முறை
சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடந்தது.
இதற்கிடையே அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
மேலும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து மண்ணூர்பேட்டைக்கு உடல் எடுத்துச் செல்லப்படும்போது போலீசார் சொன்ன பாதையில் செல்லாமல் சென்றதால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
சாலை மறியல்
சுரேஷ் குமார் கொலையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்ளிட்டோர் சாலை மறியலில் குதித்தனர்.
சென்னை அமைந்தகரையில் இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய சாலை மறியலின் போது வழிபாட்டுத்தலம் மற்றும் வணிக வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 5 பேருந்துகள், 2 வேன் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை பூந்தமல்லி சாலையிலும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல, வேலூர், திருப்பூர், மதுரை, கரூர், நாகப்பட்டனம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேவாலயத்தின் மீது தாக்குதல்
சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அண்ணாநகர், பாடி ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. சில கடைகள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அண்ணாநகரில் 4 பேருந்து கண்ணாடிகள் உடைந்தன. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
8 தனிப்படைகள் அமைப்பு
இதற்கிடையே சுரேஷ் குமார் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications