யானைகளுக்கும் எல்லை பிரச்சனை: தமிழக – கர்நாடக எல்லையில் சண்டையிட்ட யானைகளில் ஒன்று பலி
ஈரோடு: தமிழகம் - கர்நாடக வனப்பகுதியில் நேற்று இரு ஆண் யானைகள் சண்டையிட்டதில் ஒரு யானை பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பர்கூர் வனப்பகுதி கிழக்கு பீட்டில் உள்ள தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள உப்புபள்ளம் என்ற இடத்தில் நேற்று மதியம் பர்கூர் ரேஞ்சர் அழகேசன், வனவர் தனபால் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, வனப்பகுதியில் 16, வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. பர்கூர் கால்நடை மருத்துவர் பூவிழிராஜாவை அழைத்து வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
உடற்கூறு ஆய்வில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு சண்டையிட்டபோது இறந்து போன யானையின் ஒன்பதாவது விலா எலும்பு பகுதியில் யானையின் இதயம் உள்ள இடத்தில் மற்றொரு யானை தந்தத்தால் குத்தியுள்ளது.
இதனால் இதயத்தில் அதிக ஆழமாக குத்துப்பட்டு இந்த யானை இறந்தது தெரியவந்தது. யானைகளுக்குள் நடக்கும் எல்லை பிரச்னை குறித்த மோதலால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications