ஓசூர்: தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை சராமாரியாக வெட்டிய இளைஞர்
ஓசூர்: ஓசூர் அருகே தனியார் மருத்துவமனையில் புகுந்து ஊழியரை, வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த சசி (32) என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக சேர்த்துள்ளார். பிரசவம் முடிந்ததும் மருத்துவமனைக்கு பணம் கட்டாமல் மனைவியை சசி வீட்டுக்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசியை டாக்டர் போனில் தொடர்பு கொண்டபோது, மருத்துவமனை நிர்வாகம் அதிக அளவில் பில் போட்டு உள்ளதாகவும், அதை தன்னால் கட்ட இயலாது என்றும் கூறியுள்ளார். அப்போது, நேரில் வந்து பேசுமாறு டாக்டர் கூறியுள்ளார். ஆனால் சசி நேரில் வரவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு வீச்சரிவாளுடன் சசி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் டாக்டர் மற்றும் பில்லிங் செக்சன் ஊழியர் பற்றி இதர ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரித்துள்ளார். அப்போது, இரண்டு பேரும் பணியில் இல்லை என்று கூறியவுடன் சசி, நேராக மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு பணியில் இருந்த பர்கூரைச் சேர்ந்த ஊழியர் பிரகாஷ் (35) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கை, கால் மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் சசி அரிவாளுடன் அங்கிருந்து தப்பி விட்டார்.
பலத்த காயம் அடைந்த பிரகாஷ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை வெட்டும் காட்சி மற்றும் அவர் அரிவாளுடன் செல்லும் காட்சி உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஓசூர் டவுன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சசியை தேடி வருகின்றனர்.
மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications