காவிரி: மத்திய அமைச்சர் உமாபாரதியுடன் அன்புமணி சந்திப்பு! விஜயகாந்த் 'டிராமா' போடுவதாக விளாசல்!!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை நேரில் சந்தித்த பா.ம.க. எம்.பி.யும் அக்கட்சி முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து மனு கொடுத்தனர். இக்குழுவில் பா.ம.க.வினர் இடம்பெறவில்லை.
இது குறித்து விஜயகாந்திடம் கேட்ட போது, நாங்கள் 30 முறை தொடர்பு கொண்டோம்.. பேச முடியவில்லை என்றார். ஆனால் பா.ம.க. தரப்பு இதனை மறுத்து வந்தது.

உமாபாரதியுடன் அன்புமணி சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதியை நேற்று இரவு அவரது இல்லத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசினார்.
அப்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதைத் தடுக்க வலியுறுத்தி அவர் கோரிக்கை மனுவை அளித்தார். இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி கூட்டம்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மதிக்காமல், மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகம் செய்து வரும் முயற்சியைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என உமா பாரதியிடம் கேட்டுக் கொண்டேன்.
இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மூத்த வழக்குரைஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நிலுவையில் உள்ள தமிழக அரசின் வழக்குகளில் தீர்வு கிடைக்க மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை. இதில் அரசியல் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

டிராமா போடும் கேப்டன்
ஆனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக மாநிலத்தில் தனது கடமையைச் சரிவர ஆற்றாத விஜயகாந்த், எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய விஜயகாந்த், அப்பொறுப்பின் மூலம் இதுவரை தமிழ்நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்களைப் பற்றி அவருக்கு உண்மையில் அக்கறையும் கிடையாது.

பேப்பரே படிக்காதவர்...
சட்டசபைக்கு செல்வதும் இல்லை; பேசுவதும் இல்லை. மகனின் திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறேன் என்றும் இரண்டு மாதமாக நாளிதழ்களைப் படிக்கவில்லை என்றும் கூறும் அவர் கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவதுமாக உள்ளார்.

இவ்வளவு மோசமாகிவிட்டதே தி.மு.க.
பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக விஜய்காந்த் தரப்பில் இருந்து எனக்கு நேரடியாக எந்த அழைப்பும் முறைப்படி வரவில்லை. விஜயகாந்த்தை நம்பி அவரது பின்னால் போகும் அளவுக்கு தி.மு.க.வின் நிலைமை இவ்வளவு மோசமாக தரம் தாழ்ந்து விட்டதே என எண்ணும் போது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications