கடைசி வரை வீட்டு முன் போராடிய குமுதா... சேர்ந்து வாழ மறுத்த கல் நெஞ்ச காவலர்.. நடந்த பெரும் சோகம்
தென்காசி: தென்காசியில் தன்னோடு சேர்ந்து வாழ போலீஸ்காரரான கணவர் மறுத்துவிட்ட நிலையில், அவரது வீட்டு வாசலில் மனைவி தர்ணா செய்தார். ஆனால் காவலர் மனம் இறங்காததால் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கல்லூரணி வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவருடைய மனைவி கிருஷ்ணவடிவு. இவர்களுக்கு குமுதா (23) உள்ளிட்ட 2 மகள்களும், முத்துக்குட்டி என்ற மகனும் உள்ளனர்

இதில் குமுதாவுக்கு ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகனான 29 வயதாகும் சுதர்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. சின்னத்துரையின் ஒரு மகன் முத்துக்குட்டி, மணிமுத்தாறு ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். சின்னத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
குமுதாவின் காவலர் சுதர்சன், சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பின்னர்கு குமுதா சுதர்சன் தம்பதி ராயப்பநாடானூரில் சில நாட்கள் வசித்து வந்தார்கள்.
இதனிடையே விடுமுறை முடிந்து சென்னைக்கு பணிக்கு திரும்பிய சுதர்சன், வாடகை வீடு ஏற்பாடு செய்து விட்டு மனைவி குமுதாவை அழைத்து செல்வதாக கூறினார்கள் ஆனால், சுதர்சனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. கணவர் சுதர்சன் தன்னை விரைவில் அழைத்து செல்ல வருவார் என்று மனைவி குமுதா காத்திருந்த நிலையில், அவரை சுதர்சன் தவிர்த்தார். மனைவியிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை குமுதா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சுதர்சன், குமுதாவிடம், 'உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நான் வேறு பெண்ணை விரும்புகிறேன்' என்று கூறி குடும்பம் நடத்த மறுத்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதா தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் பெற்றோர், திருமணம் ஆகி சில நாட்களிலேயே தனது மகளை கணவர் பிரிவதை அவர்களால் தாங்க முடியவில்லை.. சுதர்சனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுதர்சன், மனைவி குமுதாவுடன் சேர்ந்து வாழ மறுத்து வந்தார். மேலும் அவர் செல்போனில் குமுதாவை மோசமாக பேசி திட்டினாராம். இதனால் வேதனை அடைந்த குமுதா தனது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு சுதர்சன் சொந்த ஊரான ராயப்பநாடானூருக்கு வந்திருப்பதாக அறிந்த குமுதா தனது தாயார் கிருஷ்ணவடிவு மற்றும் உறவினர்களுடன் கணவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கணவரின் குடும்பத்தினர் யாரும் இல்லை. வீடு பூட்டியே கிடந்தது.
உடனே, குமுதா தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, கணவரின் வீட்டு முன்பு தன் அம்மாவுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். நீண்ட நேரமாக போராட்டம் நடத்தியும், கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
இதனால் மனமுடைந்த குமுதா, தாயாருடன் கல்லூரணியில் உள்ள தங்களது வீட்டுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் குமுதா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமான 6 மாதங்களில் குமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகிறார்.

இதற்கிடையே, குமுதாவின் உறவினர்கள் குமுதாவின் சாவுக்கு காரணமான சுதர்சனை கைது செய்ய வேண்டும், அது வரையிலும் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற மனவேதனையில் குமுதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.. தற்கொலை மனநிலை வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications