“ஆ.ராசா மனுஷன் மாதிரியே பேசமாட்டார்.. அவர் என்ன ஜோசியரா?”.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!
நெல்லை: "ஆ.ராசா என்ன ஜோசியரா? பெரிய புள்ளியியல் ஆய்வாளரா? அவர் சொன்னால் நடந்துவிடுமா? அவர் எல்லாவற்றிலும் எதிராகப் பேசக்கூடியவர், ஒரு மனுஷன் மாதிரியே பேசமாட்டார்" என்று காட்டமாக கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக எம்.பி ஆ.ராசாவின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி பலவீனமாகும் என்று ஆ.ராசா ஏன் சொல்கிறார்? அவர் என்ன ஜோசியரா? பெரிய புள்ளியியல் ஆய்வாளரா? அவர் சொன்னால் நடந்துவிடுமா? அவர் எல்லாவற்றிலும் எதிராகப் பேசக்கூடியவர், ஒரு மனுஷன் மாதிரியே பேசமாட்டார்" என்று காட்டமாக கூறியுள்ளார்.
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து விளக்கிய நயினார் நாகேந்திரன், "நீண்ட இழுபறி என்று சொல்வது தவறு. அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி பேசியபோதே கூட்டணி உறுதியாகிவிட்டது. அன்றே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் என்று அமித்ஷா தெளிவாக கூறியிருக்கிறார்" என்றார்.
2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "அதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தேர்தல் பணிகள் மற்றும் புதிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் பொன்முடி சர்ச்சைப் பேச்சால் அவர் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "திமுக எப்போதுமே பெண்களுக்கு எதிரான கட்சி. ஆ.ராசாவாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், பெண்களைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார்கள் இதற்கு மேல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதை எப்படி சொல்வது.
பொன்முடி மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார், அதில் என்ன சந்தேகம்? பொன்முடி மதம் மற்றும் பெண்கள் குறித்து தவறாக பேசியிருக்கிறார். இதை ஊடகங்கள் திருப்பி திருப்பி ஒளிபரப்பவில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications