சென்னை: ஜனவரி இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநாடு: கேஜ்ரிவால் பங்கேற்பு
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநாடு ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ‘ஆம் ஆத்மி' கட்சி தடம் பதிக்க தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆத் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த கட்சியில் சேருவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், கட்சியில் புதிய உறுப்பினராக ஆர்வம் காட்டுபவர்களுக்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கணினி மூலம் உறுப்பினர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. திங்களன்று ஏராளமானோர் வந்திருந்து ‘ஆம் ஆத்மி' கட்சியில் புதிய உறுப்பினராக சேர்ந்தனர்.
கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் ஆனந்த் கணேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

33000 உறுப்பினர்கள்
ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரையில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ‘ஆம் ஆத்மி' பேஸ்புக் கணக்கிலும், இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினராக ஆகலாம்.

மாநில மாநாடு
இந்த மாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொள்வதாக கூறியுள்ளார்.
வரும் 11-ந்தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். இதில் பாராளுமன்ற தேர்தல், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிப்போம். கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க விரும்புகிறோம்.

ஆட்டோ ஓட்டுநர்களும்
சமுதாய தொண்டு ஆற்றுபவர்கள் (என்.ஜி.ஓ.), சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலை சந்தித்தவர்கள், நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வக்கீல்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் உறுப்பினர்களாக சேர்ப்போம்.

நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை நாங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்போம். எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் எங்கள் கட்சியில் நீடிக்கவும் முடியாது. இதுவரையில் 6 கமிட்டி நிர்வாகிகளை நீக்கியிருக்கிறோம்.

மக்கள் பணி
மக்கள் பணி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். எங்கள் கட்சியில் இணைவதற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். குற்றப்பின்னணி இருக்கக்கூடாது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கள் கட்சியில் இணைவது குறித்து எதுவும் பேசவில்லை. நாங்களும் அவரை சேரும்படி கேட்கவில்லை.

கூடங்குளம் உதயகுமார்
உதயகுமாருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுவதும் உண்மைக்கு மாறானது. கட்சியில் முதலில் எல்லோரும் உறுப்பினராக தான் சேர முடியும். அதன்பிறகு அவர்களின் செயல்பாடு, நடவடிக்கைகள், சேவை நோக்கத்தை பார்த்து தான் கட்சியில் பொறுப்பை மத்திய தலைமை வழங்கும்.

மக்களின் கருத்து
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அடித்தட்டு பிரச்சினைகளை முன் எடுத்து செல்லும் வகையில், மக்களின் கருத்துக்களை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கிராமங்களில் சென்று மக்கள் கருத்தை அறிந்து கொள்வார்கள். அதன்படி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் நடக்க இருக்க மாநாட்டில் அறிவிக்கப்படும் இவ்வாறு டாக்டர் ஆனந்த் கணேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications