அதெப்படிங்க கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியும்.. திமுக, அதிமுகவுக்கு ஏ.சி.எஸ். கேள்வி!
வேலூர்: கூட்டணி இல்லாமல் யாருமே போட்டியிட முடியாது. அப்படிப் போட்டியிட்டால் அக்கட்சிகள் தோல்வியையே தழுவும் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
மேலும் தாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிப்பதாகவும் கூறியுள்ளார் ஏ.சி.சண்முகம். வரும் சட்டசபைத் தேர்தலில் தங்களது கட்சி வாணியம்பாடி மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிடும் என்றும் ஏசிஎஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து வேலூரில் நடந்த மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய நீதிக்கட்சி இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே செயல்பட்டு வருகிறது. முன்பு கூட்டணியில் இருந்த 7 கட்சிகளில் மதிமுக இப்போது இல்லை.
தேமுதிகவும், பாமகவும் வெவ்வேறு நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கட்சிகளிடம் 15 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இறுதி முடிவு வெளியே வரும்.
சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பலமான கூட்டணி அமைக்கும். அதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெறும். சட்டசபை தேர்தலில் வேலூர், வாணியம்பாடி தொகுதிகளில் புதிய நீதி கட்சி நிச்சயம் போட்டியிடும்.
அதிமுகவும், திமுகவும் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிடப் போவதாக கூறுகின்றனர். கூட்டணியில்லாமல் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தோல்வியையே தழுவும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications