கமல்ஹாசனுக்கே தெரியாத வாழ்க்கை ரகசியம்.. முதல் முறையாக வெளியே சொன்ன சகோதரி நளினி!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன் அறிஞர் அண்ணா மடியில் அமர்ந்தவர் என்று அவரது சகோதரி புதிய தகவல் ஒன்றை தெரிவித்தார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அதில் வீடியோ மூலமாக கமல்ஹாசன் சகோதரி நளினி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், நடிப்புலகத்தில் உன்னை நான் ஊக்கப்படுத்தவில்லை. அந்த வெற்றியில் எனக்கு பங்கு இல்லை. ஆனால், பொது வாழ்வில் நமது அப்பாவிற்கு பிறகு நீ நமது குடும்பத்தில் இருந்து சென்றுள்ளாய். இதில் நான் பங்கெடுக்க விரும்புகிறேன்.

காமராஜர், பக்தவச்சலம், எம்ஜிஆர் போன்றவர்களிடம் விளையாடியவன், அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) மடியில்தான் இருந்தது இல்லை என்றாய். ஆனால் உனது சிறு வயதில் நாம் குடும்பத்தோடு குற்றாலம் போயிருந்தோம். அப்போது, நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே போய்விட்டாய். அங்கு திமுக கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கே இருந்த அண்ணாதுரை மடியில் அமர்ந்து கொண்டாயாம். நமது உதவியாளர் உன்னை கண்டுபிடித்து அழைத்து வந்து இதை கூறினார்" இவ்வாறு நளினி தெரிவித்தார்.
இதையடுத்து கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசுகையில், இது எனக்கே இப்போதுதான் தெரியும். இதன் மூலம், எனது மனக்குறை நீங்கிவிட்டது என்றார். மேலும் ராமாவரத்தில் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததே எம்ஜிஆர்தான். அவரிடம் அப்போதே அரசியல் நீச்சலும் கற்றுக்கொண்டிருந்திருக்கலாம் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications