உடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை!
நடிகர் ரஜினிகாந்த் உடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா செல்லும் நிலையில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : அரசியலுக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக இன்று இரவு அமெரிக்கா செல்லும் நிலையில் மாவட்ட மக்கள் மன்றத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் பாதி அரசியல்வாதியாகிவிட்ட ரஜினிகாந்த், இன்னும் முழு அரசியல்வாதி அவதாரம் எடுக்கவில்லை. அவர் தொடங்கப்போவதாக சொன்ன அரசியல் கட்சி எப்போது உதயமாகும் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் தலைமை இல்லை, எம்ஜிஆர் ஆட்சியை மக்களுக்கு தருவேன் என்று சொன்னவர், அதன் பின்னர் அமைதியாகவே இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பெயருக்கு ஒரு ஆதரவை தெரிவித்துவிட்டு, ஐபிஎல்லுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒரு சார்பாக போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் போட்டு இயக்குநர் பாரதிராஜா சீமானின் கோபத்திற்கு ஆளானார்.
2.0, காலா படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் முடிந்த உடன் இமயமலை சென்று ஓய்வெடுத்துவிட்டு வந்தார். இமயமலை பயணத்திற்கு பிறகு அமெரிக்கா பயணம் இருக்கும் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில் இன்று உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அங்கு 2 வாரங்கள் தங்கி முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தான் ஊரில் இல்லாத சமயத்தில் மக்கள் மன்றத்தினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ரஜினி அவர்களுக்கு ஆலோசனை கூறி வருவதாக தெரிகிறது. மேலும் மக்கள் மன்றத்தினர் பெயரை கெடுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் ரஜினி கண்டிப்புடன் கூறியுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications