நடிகர் விஷால் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய 50 பேர் கைது
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட பொதுப் பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று நடிகர் விஷால் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்ற படையினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி பேசியதற்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும்,

மேலும், உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், காவிரி நதி நீர் பிரசனைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியதற்கு, நதி நீர் பிரச்னைக்காக போராடி வரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் முன்னேற்ற படையின் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று அண்ணாநகர் ‘ டி' பிளாக்கில் வசிக்கும் நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட வந்தனர்.
போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் தடுப்பு வேலிகள் அமைந்திருந்தனர். இதனால் 3வது அவென்யு, 4வது அவென்யு சந்திப்பில் நடிகர் விஷாலின் உருவபொம்மையை எரித்தனர். விஷாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை அடுத்து 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications