''சாப்ட்டவன் கையை கழுவிட்டு போய்ட்டான்.. சாப்பாடு போட்டவன் சங்கடப்பட்டு நிற்கிறான்...!''
நாகர்கோவில்: சமீபத்தில் கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் போட்ட கறி விருந்தால் இப்போது தங்கம் பெரும் சங்கடமாகிப் போய் நிற்கிறாராம்.
காரணம், இந்த கறி விருந்தில் கலந்து கொண்டோரை வாயும் கையுமாக வீடியோவில் படம் பிடித்து விட்டனர் தேர்தல் அதிகாரிகள்.
இந்த வீடியோவால் தற்போது வேட்பாளர் ஜான் தங்கம் ரொம்பவே டென்ஷனாக இருக்கிறாராம். அதைவிட கொடுமை, இந்த கறி விருந்துக் காட்சியை தேர்தல் அதிகாரிகள் படம் பிடித்தபோது கேமராவைப் பார்த்து எலும்பை கடக் முடக் என்று வாயில் வைத்துக் கடித்தபடியும், சிரித்தபடியும் போஸ் கொடுத்த அதிமுகவினர்தான் பெரிய காமெடியாம்.

கன்னியாகுமரியிலிருந்து ஜான் தங்கம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் ஜான் தங்கம் போட்டியிடுகிறார். தனக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

கடும் போட்டியில்
இத்தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் என பெரிய பெரிய ஆட்கள் நிற்கிறார்கள். போட்டியும் கடுமையாகத்தான் உள்ளது.

பேச்சிப்பாறையில் வந்த பஞ்சாயத்து
இந்த நிலையில் பேச்சிப்பாறை மலைப் பகுதியில் பிரசாரம் செய்யப் போயிருந்தார் ஜான் தங்கம். அங்குதான் பஞ்சாயத்தாகி விட்டது.

கறி விருந்து
ஜான் தங்கம் உள்பட அவருடன் வந்த அனைவருக்கும் அங்குள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் கறிச் சோறு போட்டு விருந்து வைததுள்ளனர்.

மோப்பம் பிடித்த தேர்தல் அதிகாரிகள்
இந்த கறிச்சோறு சமாச்சாரம் தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டது. உடனே படையெடுத்து கேமராவுடன் வந்து விட்டனர்.

அட பக்கிகளா.. இது என்ன கல்யாண வீடியோவா
அவர்கள் விருந்து சாப்பிட்டவர்களை வீடியோ கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். அதைப் பார்த்த பலர் ஏதோ கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது போல நினைத்துக் கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர்.

எலும்பு கடிக்கிறேன்.. இதை எடுய்யா
சிலர் வாயில் பெரிய சைஸ் எலும்புகளைத் திணித்து கடித்து ராஜ்கிரண் போல ராட்சசதனமாக கேமராவுக்கு போஸ் கொடுத்தனராம். இதைப் பார்த்து ஷாக் ஆன அதிகாரிகள், விடாமல் அதையும் வளைத்து வளைத்துப் படம் பிடித்து விட்டனர்.

மத்தியான சாப்பாடுதானே போட்டார்கள்
இப்போது இதுகுறித்து வழக்குப் போட்டுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். இதனால் ஜான் தங்கம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications