கருணாநிதியை சட்டசபையில் எப்படியெல்லாம் அழைக்கலாம்? யோசனை சொல்லும் ராமதாஸ்
சென்னை: சட்டசபையின் நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிமுக, திமுக ஆகிய இரு விவாதிக்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக இடையே உள்ள முரண்பாடான கருத்துகளால், சட்டசபையில் அடிக்கடி அமளி ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வினா எழுகிறது
தமிழக சட்டசபையில் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் மோதல்களும், தனிநபர் தாக்குதல்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இதற்காகத் தான் இரண்டு கட்சியினரையும் சட்டப் பேரவைக்கு மக்கள் அனுப்பி வைத்தார்களா? என்ற வினா எழுகிறது.

கவலையளிக்கிறது
தமிழகத்தின் 15ஆவது சட்டசபை கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல்முறையாகக் கூடியது. அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பதவியேற்பு, சட்டசபை தலைவர் தேர்வு, ஆளுநர் உரை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் நேற்று தான் முதன்முறையாக சட்டசபையில் விவாதங்கள் தொடங்கின. முதல் நாள் விவாதத்தில் அனல் பறந்திருந்தால் அது மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்கும். ஆனால், முதல் நாள் விவாதத்தில் அவலங்கள் நிறைந்திருந்தது தான் கவலையளிக்கிறது.

வார்த்தை வீச்சுகள்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, திமுக தலைவர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக புகார்களைக் கூறியதுடன், கலைஞரை கருணாநிதி என்று அழைத்ததால் திமுகவினர் ஆத்திரமடைந்து அமளியில் ஈடுபட்டனர். மற்றொரு தருணத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? என்பது பற்றி இரு கட்சி தலைவர்களும் நடத்திய வார்த்தை வீச்சுகள் சட்டசபைக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லை.

செம்மலை பேச்சு - விதிப்படி தவறு இல்லை.
திமுக தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். 13ஆவது முறையாக சட்டசபை உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, அவரை கலைஞர் என்றோ, திமுக தலைவர் என்றோ, முன்னாள் முதல்வர் என்றோ கூறியிருந்திருக்கலாம். ஆனால், செம்மலை அவ்வாறு கூறவில்லை. அது மரபுப்படி தவறு என்றாலும், விதிப்படி தவறு இல்லை.

அரிதாக கடைபிடிக்கப்படும் மரபு
சட்டசபை நிகழ்வுகளுக்கு வழிகாட்டுபவை விதிகளும், மரபுகளும். விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை. இன்னும் கேட்டால் கடந்த 25 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது திமுக தலைவரை கருணாநிதி என்றும், திமுக ஆட்சியிலிருக்கும் போது அதிமுக பொதுச் செயலாளரை ஜெயலலிதா என்றும் அழைப்பது தான் பெரும்பாலான நேரங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மூத்த தலைவர்களை மரியாதை கருதி பெயர் குறிப்பிடாமல் அவரது பதவியைக் குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என்ற மரபு மிகமிக அரிதாகவே கடைபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணம்
இதற்கெல்லாம் மேலாக ஒரு கட்சியின் தலைவரை பெயர் கூறி அழைத்தார்கள் என்பது அமளி கிளப்ப வேண்டிய விஷயமா? என்ற வினாவும் எழுகிறது. அண்ணா முதல்வராக இருந்தபோது, அவருக்கும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வினாயகத்துக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் வெடிக்கும். ஆனால், அவை மரியாதை குறைவாக இருக்காது.

பக்குவமாக பேசிய அண்ணா
அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரை நோக்கி ஆவேசமாக பேசிய வினாயகம், ''உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன'' என்றார். வினாயகம் அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் அண்ணாவின் பதவிக்காலத்தை மட்டுமின்றி, அவரது வாழ்நாளையும் குறிப்பிடுபவை என்பதால் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா , ''ஆமாம். ஆனால், எனது அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன'' என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை பக்குவமாக கூறி பதற்றத்தைத் தணித்தார். அண்ணாவின் வழிவந்த திமுக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் சட்டசபையில் அண்ணாவின் பெருந்தன்மையை கடைபிடித்திருந்தால் அவையில் அமைதி நிலவியிருந்திருக்கும்.

கச்சத்தீவு - ஊரறிந்த உண்மை
அதேபோல், கச்சத்தீவு குறித்த வாத, எதிர்வாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கச்சத்தீவு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் தாரை வார்க்கப்பட்டது என்பதும், கச்சத்தீவை மீட்கும் வரை ஓய மாட்டேன் என்று 15.08.1991 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய ஜெயலலிதா அதற்காக இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பதும் ஊரறிந்த உண்மை. இரு தரப்பின் மீதும் தவறு உள்ள நிலையில், அவை மறைத்துவிட்டு எதிர்தரப்பினர் மீது மட்டும் புகார்களைக் கூறி சட்டசபை நடவடிக்கைகளை முடக்குவது ஆரோக்கியமான செயலாக இருக்க முடியாது.

அரசியல் நாகரீகத்திற்கு இடமில்லை
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நடந்த சில அரசியல் நாகரீகம் நிறைந்த சில நிகழ்வுகள் தமிழக அரசியலில் நாகரீகம் துளிர் விடுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அதிமுகவும், திமுகவும் இருக்கும் வரை தமிழக அரசியலில் நாகரீகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற யதார்த்தத்தை சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் நிரூபித்து விட்டன.

சட்டசபை - நேரலை
1989ஆம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தொடங்கிய அரசியல் அநாகரீகம் இன்றளவும் தொடர்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் ஓரளவாவது அவை நாகரீகம் இருக்கும். ஆனால், அதை செய்வதற்கு கூட தமிழகத்தை ஆளும்கட்சி முன்வராதது துரதிருஷ்டவசமானதாகும்.

வேறு பிரச்சனை இல்லையா?
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அமைந்திருப்பதால் சட்டசபையில் ஜனநாயகம் தழைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், கருணாநிதிக்கு முன்வரிசையில் இடம், கருணாநிதியின் பெயரை யாரும் குறிப்பிடக்கூடாது உள்ளிட்டவற்றை தவிர வேறு பிரச்சினைகளே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை தான் சட்டசபையின் நிகழ்வுகள் காட்டுகின்றன.

மக்களுக்கு நல்லதல்ல
வழக்கமாக சட்டசபையில் எதிர்க்கட்சி ஆவேசமாக செயல்பட்டாலும், ஆளுங்கட்சி அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் செயல்திட்டத்தை நிலைநாட்டுவதிலேயே தீவிரமாக இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இது தமிழக நலனுக்கு நல்லது அல்ல.

சிந்திக்க வேண்டும்
கலைஞரை கருணாநிதி என்று அழைப்பதற்காக அதிமுகவை மக்கள் ஆளுங்கட்சியாக்கவில்லை. அதேபோல், கருணாநிதியின் பெயர் உரிமைக்கு போராடுவதற்காக திமுகவை எதிர்க்கட்சியாக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரு கட்சிகளுக்கு இந்த பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ளனர்.

அட்வைஸ்
200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் விலைபோகாத படித்த வாக்காளர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். எனவே, அவை நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இரு கட்சிகளும் அவையில் விவாதிக்க முன்வர வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications