ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவமானத்தில் அதிமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை
தர்மபுரி: தர்மபுரியில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அதிமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே இருக்கும் புழுதிக்கரையைச் சேர்ந்தவர் காளியப்பன்(56). அதிமுக நிர்வாகி. அவரது மனைவி நாகம்மாள்(50). காளியப்பன் அப்பகுதி மக்களின் பிரச்சனை பற்றி பஞ்சாயத்து செய்து வைப்பார். இந்நிலையில் அவர் ஊர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் முதியோர் பென்ஷன் தொகையில் மோசடி செய்துள்ளார்.
இந்த விவகாரம் பற்றி கிருஷ்ணாபுரம் மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காளியப்பனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஊர் பஞ்சாயத்தில் காளியப்பனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் நாகம்மாள் அவமானம் அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்தை குடித்துவிட்டார். மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications