ஜெயலலிதாவின் தரிசனத்திற்காக காத்திருக்கும் அதிமுகவினர்... இனி சாலையோரங்களில் நிற்கத்தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டவன் தரிசனத்திற்காக காத்திருந்தவர்களை பார்த்திருப்போம். ஜெயலலிதாவின் தரிசனத்திற்காக காத்திருந்தவர்களைப் பற்றிய கதை தெரியுமா? அப்படி காத்திருந்து பதவி பெற்றவர்களின் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. போயஸ்கார்டன் தொடங்கி தலைமைச் செயலகம் வரை முக்கிய இடங்களில் இனி அதிமுகவினர் யாரும் நிற்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை 11 பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை சோழா ஹோட்டல், ராதாகிருஷ்ணன் சாலையில் முக்கிய பாயிண்ட்கள், குயின்மேரீஸ் கல்லூரி என குறிப்பிட்ட சில இடங்களில் கரைவேட்டிகள் வரிசையாக நிற்பார்கள். ஏன் இங்கு நிற்கிறார்கள் என்று யோசிக்கவே வேண்டாம் எல்லாம் ஜெயலலிதாவின் தரிசனத்திற்காகத்தான் என்பது விபரம் அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி காத்திருந்து ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட்டதால் உச்சத்திற்கு போனவர்கள் இருக்கிறார்கள்.

இட்லி விற்பனை செய்த பெண்மணி முதல் தச்சுத்தொழிலாளி வரை ஜெயலலிதாவை தினசரி பார்த்து கும்பிட்டவர்கள் நிதியுதவி பெற்றிருக்கின்றனர். ஆனால் கட்சிக்காரர்கள் காத்திருந்து பதவி பெற்று பலனடைந்திருக்கின்றனர். அந்த காத்திருத்தலுக்குத்தான் இப்போது தடை போட்டிருக்கிறாராம் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் சமாதி எதிரே

எம்.ஜி.ஆர் சமாதி எதிரே

ஜெயலலிதாவின் அன்புப் பார்வை கிடைப்பதற்காக சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அ.தி.மு.க ஒன்றியப் பிரதிநிதியாக இருக்கும் அன்பரசு சுமார் மூன்று வருடங்களாக போயஸ் கார்டன் செல்லும் பின்னி சாலையில் கும்பிட்டபடியே நின்றார். இப்போது இடத்தை மாற்றிவிட்டார்; எம்.ஜி.ஆர் சமாதிக்கு எதிரே சென்னைப் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் அம்மாவின் கான்வாய் வரும்போது ஆஜராகிவிடுவார். இவருக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வேண்டும் என்று நிற்கிறாராம்.

கண்ணில் பட காத்திருந்தவர்கள்

கண்ணில் பட காத்திருந்தவர்கள்

சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் வா.மைத்ரேயன், ஜெ.ஜெயவர்த்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், அண்மையில் போஸ்டிங்குகளில் இருந்து கழற்றி விடப்பட்ட வி.பி.கலைராஜன், செந்தமிழன் மற்றும் விருகைரவி, நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, சிட்டி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், கு.சீனிவாசன் போன்றோர் அம்மா செல்லும் சாலையில் எந்த இடத்தில் நின்றால் சரியான கோணத்தில் கண்ணில் படுவோம் என்பதை தெரிந்து வைத்து, அந்தப் பாய்ன்ட்டில் கரெக்டாக நிற்பார்கள்.

போயஸ் தோட்டத்து பின்னி சாலைக்குச் சென்றால் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், ராஜேந்திர பிரசாத் என்று ஒரு பெருங்கூட்டமே மீண்டும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறது. ஆற்காடு நகராட்சியின் முன்னாள் தலைவி ராதிகா ஏதாவது பதவி கிடைக்காதா என்று வருடக்கணக்கில் ஜெயலலிதாவின் பாதையில் கரம்கூப்பி நிற்கிறார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில்பாலாஜிக்கு 'சோழா' பாலாஜி என்றுதான் பெயரே. சோழா ஓட்டல் அருகே அம்மா கார் வரும்போதும் போகும் போதும் அங்கே தவறாமல் இருப்பதால் அப்படி ஒரு பெயராம்.

அன்புப்பார்வைக்காக காத்திருப்பு

அன்புப்பார்வைக்காக காத்திருப்பு

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை கவுன்சிலர் நூர்ஜஹான், காலையில் ஜெயலலிதா கோட்டைக்குப் போகும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் ராயப்பேட்டை பாலத்துத் தூண் அருகே நின்று கையெடுத்து பவ்யமாகக் கும்பிடுவார். இதற்குச் சற்று முன்னதாக உட்லண்ட்ஸ் ஓட்டல் அருகே நின்று வணங்கி அம்மாவின் அன்பைப் பெற்றவர்தான் அருப்புக்கோட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ வைகைச்செல்வன்.

ராஜலட்சுமி எம்.எல்.ஏ

ராஜலட்சுமி எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, 2006 முதல் 2011 வரை ஜெயலலிதா வெளியில் வரும்போதெல்லாம் எதிர்ப்பட்டுக் கைகூப்பி வாய்ப்பு பெற்றவர். பூனைப்படையின் துரத்தலுக்கெல்லாம் ராஜலட்சுமி ஒருபோதும் கலக்கமடைந்ததில்லை. அந்த காத்திருத்தலுக்கு பலனாகவே 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. ராஜலட்சுமியும் எம்.எல்.ஏவாகிவிட்டார்.

நடிகை வாசுகி

நடிகை வாசுகி

அ.தி.மு.க பேச்சாளரும் நடிகையுமான வாசுகி, தனது கட்சி பேச்சாளர் பதவி பறிபோனதும் எதுவுமே செய்யவில்லை. போயஸ் தோட்டம் போய் வாசலில் தவமாய் தவமிருந்தார். சுமார் இரண்டு வருடம் ஜெயலலிதாவின் பார்வைக்காக காத்திருந்து அவரது பார்வை பட்டதால் மீண்டும் கட்சிப் பேச்சாளர் பதவி வாங்கினார் இவர். இப்போது அ.தி.மு.க அரசின் நான்காண்டு சாதனைகளை மேடைதோறும் பேசி வருகிறார்.

சாலையோரங்களில் நிற்கத்தடை

சாலையோரங்களில் நிற்கத்தடை

இப்படி காத்திருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களாக, எம்.பிக்களாக இருக்கிறார்கள். இப்படிக் காத்துக் கிடந்தவர்களுக்கு பல முறை ஜெயலலிதாவே நேரடியாக வாய்ப்புகளைத் தந்திருக்கிறார். ஆனால், இப்போது எல்லோரையும் 'சபாரி' போலீசார் கூப்பிட்டு, 'அம்மா, வர்ற ரூட்டுல யாரும் நிக்கக் கூடாது, கும்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்.

இதனால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+