கருணாநிதியை சட்டசபையில் பார்த்திருக்கீங்களா? திமுகவிற்கு பதிலடி கொடுத்த அதிமுக...
சென்னை: 'கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பாத்துருப்பீங்க, கலை விழால பாத்துருப்பீங்க, மானாட மயிலாடல பாத்துருப்பீங்க, ஆனா கருணாநிதிய சட்டசபைல பாத்துருக்கிறீங்களா? ஏன் திருவாருர் தொகுதியிலயாவாவது பாத்துருக்கிறீங்களா? என்று ஒரு விளம்பரம் திமுகவை பார்த்து கேட்கிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் படு பரபரப்பாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் இப்போதே தயாராகிவிட்டனர்.
ஆளும் அதிமுகவிற்கு எதிராக திமுக தரப்பு விளம்பரங்களை தர ஆரம்பித்து விட்டது. வாக்காளர்களை குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பஞ்ச் வசனங்களை வைத்து விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டது.
அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
கடைசியில் என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தையும் ஸ்லோகனாக அந்த விளம்பரத்தில் இடம் பெற செய்துள்ளது. இதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் போட ஆரம்பித்துள்ளனர்.

டிவிகளில் விளம்பரம்
இந்த விளம்பரம் மக்களிடம் எடுபடும் என்று கருதிய திமுக, இந்த ஒரு நாள் விளம்பரத்திற்காக சுமார் 18 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல தொலைகாட்சிகளிலும் அடிக்கடி இந்த விளம்பரத்தை பார்க்க முடிகிறது.

அதிமுகவின் வாட்ஸ் அப் பதிலடி
இது இப்படியிருக்க, இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட அடுத்த நிமிடமே அதிமுக வாட்ஸ்அப் வழியாக திமுகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது.
வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில்,'' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... அதை காப்பியடிச்சு திமுக காரங்க ஒரு விளம்பரம் கொடுத்துருக்கிறாங்களே... அவங்களை நெனைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது.

18 கோடிண்ணே
அண்ணே இந்த விளம்பரத்துக்கு 18 கோடிண்ணே , 18 கோடி செலவழிச்சுருக்காங்க என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்டைலில் கேட்கிறது.
முதல்வரை நான் நேர்ல பார்த்துருக்கேன், நீங்க பார்த்துருக்கிறீங்களானு கேட்க, 18 கோடியானே.

அடிச்சுக்க முடியாதுப்பா
வேற வழி இல்ல சமூக வலைதளங்களில் அதிமுகவ அடிச்சுக்க முடியல. வேற என்னணே செய்ய, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை செயல்வீரர்களை நியமனம் பண்ணி அதிமுககாரங்க அமர்க்களமாக போய்ட்டுருக்காங்க. அதான் திமுகவுக்கு விளம்பரம் கூட கொடுக்கத் தெரியாம இப்படியெல்லாம் செய்யுறாங்களோனு தோணுது.

சோப்பு விளம்பரம் மாதிரி இருக்கே
இத பார்த்தா கட்சி விளம்பரம் மாதிரி தெரியலையே, சோப்பு விளம்பரம் மாதிரிலா இருக்குனு '' என்று திமுக விளம்பரத்தை நக்கல் அடிக்கிறது.

கருணாநிதியை பார்த்திருக்கீங்களா?
இதை எல்லாம் விட மேலாக " கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பாத்துருப்பீங்க, கலை விழால பாத்துருப்பீங்க, மானாட மயிலாடல பாத்துருப்பீங்க, ஆனா கருணாநிதிய சட்டசபைல பாத்துருக்கிறீங்களா? ஏன் திருவாருர் தொகுதியிலயாவாவது பாத்துருக்கிறீங்களா? என்று ஒரு போஸ்டர் திமுகவை பார்த்து கேட்கிறது.

போஸ்டர் போர்
தேர்தல் தேதி வெளியிடுவதற்கு முன்னரே இரு கட்சியினரும் விளம்பரத்தில் குதித்து விட்டனர். திமுக இன்னும் பேப்பர் விளம்பரத்தை நம்பிக் கொண்டிருக்க அதிமுகவோ டிரெண்டுக்கு ஏற்ப வாட்ஸ் அப்பில் பட்டையை கிளப்பும் விதத்தில் ஆடியோவை வெளியிட்டுள்ளது. இப்போது திமுகவின் விளம்பரம் படுத்து விட, அதிமுகவின் ஆடியோதான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதாம்.
|
நீங்க ஆடுங்க ராசா
அதிமுக, திமுகவின் போஸ்டர் போரினை ஜென்டில்மேன் படத்தில் செந்தில் ஆடும் சப்லிங் ஆட்டத்தை மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்துள்ளார் ஒரு டுவிட்டர்வாசி. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இங்கே அரசியல்வாதிகளின் போஸ்டர் போர் சமூக வலைத்தளவாசிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications