தகவல் ஆணையர் நியமனத்தில் எதிர்கட்சித்தலைவர் என்றமுறையில் ஆலோசிக்கவில்லை..ஆளுநரிடம் விஜயகாந்த் புகார்
சென்னை : தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தம்மை கலந்தாலேசிக்காதது குறித்து ஆளுநர் ரோசையாவை சந்தித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பூரண மதுவிலக்கைக் கோரி வரும் 13 ஆம் தேதி தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், விஜயகாந்த் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில், ரோசய்யாவை சந்தித்துப் பேசிய பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய விஜயகாந்த், சட்டப்பேரவைக்கு தேவையான நேரம் வரும் போது வருவேன் என்று கூறினார். தான் அளித்த கோரிக்கை மனுவில் உள்ள விபரங்களையும் அவர் விளக்கினார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
1. பிரதான எதிர்க்கட்சித் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் தகவல் ஆணையர் ராமானுஜம் மற்றும் தட்சிணாமூர்த்தி அவர்களையும் நியமித்தது செல்லாது.
2. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
3. NLC பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும்.
4. தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. கனிமவள கொள்ளைக்கு நீதிமன்றம் தடை விதித்தது போல், தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநரிடம் விஜயகாந்த் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்குக்கான சட்டத்தை அமல்படுத்த சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications