சிக்கிய அதிமுக பிரமுகர்.. எடப்பாடி ஏரியாவாம்! கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச் சாராயம் அருந்திய நிலையில், அவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுக சார்பில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்வராயன் மலை அருகே உள்ள மணப்பாச்சி கிராமத்தில் அதிமுக பிரமுகர் சுரேஷ் கள்ளச்சாராயம் தயாரித்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சுரேஷ், அதிமுகவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளராக முன்பு பொறுப்பு வகித்துள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சுரேஷ் மீது கொலை, அடிதடி, சாராயம் மற்றும் மணல் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் பெரும் விவாதமாகி உள்ள நிலையில், ஆளும் அரசை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications