கட்-அவுட் வைப்பதில் க.க.க போ.. 'மெட்ராஸ்' திரைப்பட சுவர் பாணியில் அதிமுகவினர் அடாவடி
சென்னை: பேனர் கலாச்சாரம் எல்லை மீறிப்போய்க்கொண்டுள்ளது என்பதற்கு சென்னையில் நடைபெறும் சம்பவங்களே சாட்சியாக உள்ளது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே அளவுக்கு அதிகமாக பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்து மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகின்றன.
விடிந்தும் விடியாததுமாக, தினசரி இவர்கள் முகத்தைதான் பார்க்க வேண்டுமா என்ற அங்கலாய்ப்பு ஒருபுறமெனில், பேனர்கள் எப்போது தலையில் சாயுமோ என்று உயிரை பிடித்து சாலைகளில் நடமாடும் நிலையில்தான் இவ்விரு கட்சிகளும் மக்களை வைத்துள்ளன.

உணர்ந்த திமுக
இதை உணர்ந்துகொண்ட திமுக தலைமை சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதிமுகவோடு போட்டிபோட்டு கட்-அவுட்டுகளை வைக்க வேண்டாம், இது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று அறிவித்துள்ளது. ஆனால், ஊடக செய்திகளை கண்டுகொள்ளாத அதிமுகவினரோ, தொடர்ந்து கட்-அவுட் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து வருகிறார்கள்.

புது டெக்னிக்
இதில் கொடுமை என்னவென்றால், இப்போதெல்லாம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அதிமுகவினர் பேனர்களை முற்றிலுமாக அகற்றுவதில்லை. வெறும், பேனர்களை மட்டும் கிழித்து எடுத்துவிட்டு, அவற்றுக்காக பொருத்தப்படும் மர சட்டங்களை அப்படியே அதே இடத்தில் வைத்துள்ளார்கள்.

பல நிகழ்ச்சிகள்
கடந்த 20 நாட்களாக அதிமுக செயற்குழு, பொதுக்குழு, புத்தாண்டு, எம்.ஜி.ஆர்.பிறந்த நாள், பொங்கல் விழா, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருகை என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால், பேனர்களை மட்டுமே மாற்றியபிட உள்ளனர், ர.ரக்கள். ஆனால் மர சட்டம் அங்கேயே நிலைபெற்றுவிட்டது.

குளிர்விக்க
பொதுமக்கள் இதைப்பார்த்து என்னதான் வேதனை வெளிப்படுத்தினாலும், தலைமையை குளிர்வித்து வேண்டியதை பெற வேண்டும் என்ற எண்ணத்தில், ர.ரக்கள் சென்னையில் நீக்கமற கட்-அவுட்டுகளை அமைத்து கடுப்பேற்றி வருகிறார்கள்.

மெட்ராஸ் பட பாணி
ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி உள்ளிட்டோர் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவரை விளம்பரம் செய்வதற்காக நிரந்தரமாக வைத்துக்கொள்வதில் அரசியல் புள்ளிகளிடையே மோதல் ஏற்பட்டுவரும். அதேபோன்று, கட்-அவுட் மர சட்டங்களை அப்படியே நிரந்தரமாக மாற்றிக்கொள்ளும் கலாசாரத்தை தொடங்கி வைத்துள்ளது அதிமுக.

கோர்ட் தலையிடுமா?
ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தி, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல பேனர் தொடர்பான வழக்குகளில் கோர்ட் தலையிட்டு மக்களின் உயிரை காப்பாற்ற முன்வருமா என்ற ஏக்கம் சென்னை உள்ளிட்ட மாநகர மக்களுக்கு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications