மக்கள் நலனுக்காகவே நில ஆர்ஜித மசோதாவுக்கு ஆதரவு- விமர்சிக்க கருணாநிதிக்கு 'அருகதை' இல்லை- ஓ.பி.எஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்கள் நலனுக்கானது என்பதாலேயே அண்ணா தி.மு.க. ஆதரித்தது என்றும் இதை விமர்சிக்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அருகதை இல்லை என்றும் தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் புதிய நில கையகப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், கேள்வியை எழுப்பினார். இதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசியதாவது:

முன்பு நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' என்னும் சட்ட முன்வடிவை முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது.

இந்தச் சட்டம் 1.1.14 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய பாரதிய ஜனதா அரசு அவசர சட்டம் மூலம் கடந்த 31.12.14 அன்று கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் வகையில் தற்போது உள்ள ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் 9.3.15 அன்று அறிமுகம் செய்தது.

ஜெ. சொன்ன திருத்தம்

ஜெ. சொன்ன திருத்தம்

அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில் மத்திய பாரதிய ஜனதா அரசு மேலும் 9 திருத்தங்களை 10.3.15 அன்று தாக்கல் செய்தது. நில எடுப்பு தொடர்பாக இந்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்காக நில எடுப்புச் சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முடிவு ஆகும்.

ஏற்றுக் கொண்ட பா.ஜ.க.

ஏற்றுக் கொண்ட பா.ஜ.க.

அதன் அடிப்படையில், இந்த சட்டத் திருத்தத்தில் ஒரு திருத்தத்தை அ.தி.மு.க. முன்மொழிந்தது. இதனை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க அரசு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது.

ஆதரவு

ஆதரவு

எனவே, ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2013-ம் ஆண்டு ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவையில் அ.தி.மு.க. ஆதரவளித்து வாக்களித்தது.

எங்க கொள்கை இது

எங்க கொள்கை இது

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை தரக்கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானவைகளை எதிர்ப்பது என்பதும்தான் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும்.

அரசியல் ஆதாயம்

அரசியல் ஆதாயம்

தற்போதும், 2013-ம் ஆண்டுக்கான நில எடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், கெயில் நிறுவனம் குழாய் பதித்திட இயலும். அவ்வாறு வழிவகை செய்யும் பெட்ரோலியம் மற்றும் மினரல் பைப்லைன் சட்டத்துக்கு முழு விலக்கு அளிக்க அந்த சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. அப்படியானால், அந்த சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற சட்டம் என்றும், தற்போதைய சட்டத்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல்தான். அரசியல் ஆதாயத்திற்காக அந்த சட்டத்தை அப்போது ஆதரித்து, தற்போது எதிர்ப்பவர்கள் இதை விளக்க வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதை ஏற்கமாட்டோம் என்று ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு அருகதை இல்லை

கருணாநிதிக்கு அருகதை இல்லை

மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவானது என்றும், சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் எடுத்து விடுவதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதைக் கேட்க அவருக்கு அருகதை இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தை கையகப்படுத்துதல் சட்டம் என்ற சட்டமுன்வடிவை 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்து 1999-ம் ஆண்டு அதை சட்டமாக்கியது தி.மு.க. அரசு.

நில ஆக்கிரமிப்பு

நில ஆக்கிரமிப்பு

கடந்த தி.மு.க. ஆட்சியில் தொழிலியல் துறைக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் அப்போது வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்காகவும் மாற்றம் செய்யப்பட்டது. விதிகளை மீறி நிலத்தை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் அப்போது நடந்தன.

டிட்கோ, சிப்காட், சிட்கோ போன்ற நிறுவனங்கள் எந்தவொரு தனியார் தொழிற்சாலைக்காகவும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை. அவை குத்தகைக்குத்தான் விடப்படுகின்றன. தொழில்பூங்காக்களுக்காக நிலம் கையகப்படுத்தும் 2013-ம் ஆண்டு சட்டத்திலேயே, அதற்காக விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை. எனவே இப்போதுள்ள சட்டத்தில் அதற்கான ஷரத்து நீக்கப்பட்டதாகக் கூறுவது சரியல்ல.

உடன்குடி விவகாரம்

உடன்குடி விவகாரம்

2013-ம் ஆண்டு சட்டப்படி, தனியார் கம்பெனிக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போதுதான் பாதிக்கப்படும் குடும்பங்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரின் ஒப்புதல் பெற வேண்டும். அ.தி.மு.க. அரசு பொதுக்காரியங்களுக்காக அன்றி, தனியார் நிறுவனத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில்லை. தி.மு.க. ஆட்சியில் அப்படியில்லை.

உடன்குடி அனல் மின்நிலையத்துக்காக தனியார் நிறுவனத்துக்கு 200 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. அரசு கையகப்படுத்தவில்லையா என்று கருணாநிதி கேட்கிறார். அது தனியார் திட்டமல்ல. அந்த நிலத்தின் உரிமைதாரர் தமிழ்நாடு மின்சார வாரியம்தான்.

மாநிலத்துக்கு அதிகாரம்

மாநிலத்துக்கு அதிகாரம்

பொதுநலனுக்காக நிலத்தை கையகப்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் நிலத்தை இழந்தவர்களுக்கு மறு வாழ்வும், குடியமர்வும், இழப்பீடும் கிடைத்ததா? என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தச் சட்டம், குறிப்பிட்ட சில நில எடுப்பு நிகழ்வுகளில் அத்தியாயம் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் 3-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது.

பொதுநலனுக்காக ஆதரவு

பொதுநலனுக்காக ஆதரவு

தொழில் வளாக வழிக்கு தேவையான நில எடுப்பு, குறிப்பிடப்பட்ட இருப்புப் பாதை மற்றும் சாலையில் இரு மருங்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு குறையதபட்ச நிலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், பயிர் செய்யப்படாத நிலங்கள் ஆகியவற்றை அளவு செய்து அவற்றின் விவரங்களை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும் என்றும், நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த விதிமுறைகளின்படி நிலம் கையகப்படுத்த வழி வகை செய்தது விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால்தான், இதனை மக்களவையில் அ.தி.மு.க. ஆதரித்தது.

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+