அதிமுக, திமுகவினர் நிகழ்ச்சிகளால் விழிபிதுங்கிய டிராபிக்! சென்னை மக்கள் அவதி
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் அதிமுக, திமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் சார்பில் முக்கிய நிகழ்வுகள் ஒரே பகுதியில் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசலால் மாநகரம் விழி பிதுங்கியது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட 14 பேரின் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா, இன்று, தலைமையேற்று நடத்தி வைத்தார்.

பெரிய இடைவேளைக்கு பிறகு, ஜெயலலிதா பொது நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்றதால், அவரை பார்க்க தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை பல ஆயிரக்கணக்கனோர் வந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் விழா நடைபெற்ற இடத்துக்கு வந்தன. இதனால், ராயப்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல, திமுக சார்பில் வழங்கப்படும் விருப்பமனுக்களைப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று என்பதால், அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் வந்தனர்.
இதனால், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள அண்ணா சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளின் எதிரொலியால், சென்னைவாசிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications