அதிமுக பொதுக்குழு டிசம்பரில் கூடுகிறது: ஜெயலலிதா பங்கேற்கிறார்?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பரில் நடைபெறும் என தகவல்கள வெளியாகியுள்ளன. பொதுக்குழு நடைபெறும் தேதி முடிவு செய்யப்படாத நிலையில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டும் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயலலிதா கட்சியை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவில் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, கட்சியில் பொறுப்புகளை பகிர்ந்து வழங்கும் வகையில், தற்போதுள்ள 52 மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளைப் பிரிக்கவும் உத்தேசத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது இல்லத்தில் இருந்தவாறே முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களும், அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை பதிவு செய்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, முதலில் மாவட்டங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்காக அருகருகில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
டிசம்பர் இறுதிக்குள் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வார்டு மற்றும் வட்டச் செயலாளர்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்கவும், பின்னர் படிப்படியாக நகரம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை விரைவில் முடித்து டிசம்பரில் பொதுக் குழுவைக் கூட்ட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதால் பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற அனுமதியுடன், பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 18 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னதாக பொதுக்குழு கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications