நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் இன்று வெளியாகிறது... உரிமை ஓபிஎஸ்
அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது அம்மா நாளிதழ் இன்று வெளியிடப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது அம்மா நாளிதழ் இன்று வெளியிடப்பட உள்ளது.
அதிமுகவிற்கு ஜெயலலிதா தலைமை பொறுப்பேற்ற பின்னர் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழை தொடங்கினார். ஜெயா டிவியும் அதிமுகவிற்காக தொடங்கப்பட்டதுதான். இந்த இரண்டிலுமே சசிகலா குடும்பத்தினர்தான் ஆதிக்கம் செலுத்தினர்.
அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையாகவும், தொலைக்காட்சியாகவும் இருந்த நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி ஆகியவை இப்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதால் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 'நமது புரட்சித் தலைவி அம்மா'என்ற நாளிதழை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியிடுகிறார்கள்.

நமது எம்ஜிஆர்
கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பிளவுபட்டது. ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும் சசிகலா தனி அணியாகவும் செயல்பட்டனர். ஜெயாடிவி, டாக்டர் எம்ஜிஆர் நாளிதழ் சசிகலா வசம் போனது.
ஓபிஎஸ் அணி சார்பில் புதிய நாளிதழ், தொலைக்காட்சி தொடங்கப்படும் அப்போதே பேசப்பட்டது.

ஆளுங்கட்சி பேப்பர்
இந்த நிலையில் தினகரன் ஒதுக்கப்பட்டு சில மாதங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துவிட்ட நிலையில், நமது எம்.ஜி.ஆரும், ஜெயா டிவியும் தினகரன் வசமானது. ஆளும்கட்சிக்கு என்று தனி ஊடகம் இல்லாத நிலையானது பரிதாபம்தான்.

அதிமுகவிற்கு நாளிதழ்
புதிய நாளிதழ், டிவி பேச்சு எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளின்போதே வெளியாகியிருக்க வேண்டிய நமது புரட்சித் தலைவி அம்மா, இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வெளியாகிறது.

ஓபிஎஸ் வசம்
இந்தப் புதிய நாளிதழின் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இயங்குகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நாளிதழின் நிர்வாகத்தில் பங்கில்லை என்று கூறப்படுகிறது. இதன் நிர்வாகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன்களும், மாஃபா பாண்டியராஜனும்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

நமது புரட்சித்தலைவி அம்மா
ஓபிஎஸ் நிர்வாகத்தில்தான் புதிய நாளிதழும் இயங்கும் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணி செயல்பட்டது அதே பெயரிலேயே நாளிதழ் செயல்படுகிறது. இது அதிகம் ஓபிஎஸ் புகழ் பாடும் என்று இப்போதே பேசிக்கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications