வாங்க, குழந்தையை போட்டு தாண்டி சத்தியம் பண்ணுங்க பார்ப்போம்.. ஒரு எம்.பியின் "வாவ்" சவால்!
சசிகலா செல்வாக்கால் சொத்து சேர்க்கவில்லை என்று, அ.இ.அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், எம் எல் ஏக்கள் எல்லாம் அவரவர் குழந்தைகளை போட்டு சத்தியம் பண்ணுங்கள் நானும் பண்ணுகிறேன் சத்தியம் என்று க
கோவை: அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்போதும் பதவி வகித்துவரும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று எல்லோரும் சசிகலா செல்வாக்கால் சொத்து சேர்க்கவில்லை என்று அவரவர் குழந்தைகள் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணுங்கள். நானும் சத்தியம் பண்றேன் என்று கோவை அதிமுக எம்பி நாகராஜன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்பி நாகராஜன். அப்போது அவர் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் நாகராஜன்.
மிகவும் கொதிப்பான மனநிலையில் பேசிய எம்பி நாகராஜன், " நீங்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள். உங்களுக்கு ஒருமித்த கருது இருக்கிறதா? இல்லையே அதுபோலத்தான் எங்க கட்சியும் என்றார்.

நாங்கள் சகோதரர்கள்
நாங்கள் எல்லாம் சகோதரர்கள். இப்போது அப்படித்தான் இருப்போம். அப்புறம் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொள்வோம்.
ஓபிஎஸ் இந்த ஆட்சியைப் பற்றி பேசாத பேச்சா? பாண்டியராஜன் ஜெயலலிதா பொம்மையை வைத்து ஆர்கே நகரில் பிரசாரம் செய்தார்.

எல்லாம் அப்படித்தான்
எங்களுக்கு நெஞ்சு கொதித்தது. அவர்கள் இப்போது துணைமுதல்வர், மாண்புமிகு அமைச்சராக ஆகவில்லையா? அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?.எல்லாம் அப்படித்தான்.

தினகரன் ஆதரவு தேவை
இரட்டை இலை எங்களுக்கு கிடைக்க தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் ஆதரவும் தேவை. யார்தான் இந்தக் கட்சியில் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரால், ஆளாகவில்லை. அவர்கள்தான் எம் எல் ஏ மற்றும் எம் பி சீட்டுகளை தேர்வு செய்தார்கள்.

எல்லாமே சசிகலாதான்
அந்தக் குடும்பம்தான் அமைச்சர்கள் யார் யார் என்பதை முடிவு செய்தது. எங்கே இப்போது சொல்லுங்கள். முக்கிய முடிவுகள் எல்லாமே அமைச்சர்கள்தான் எடுத்தோம் என்று. எல்லா துறை சார்ந்த முடிவுகள் எல்லாமே சசிகலா சொல்லித்தான் எடுக்கப்பட்டது. அதுதான் உண்மை.

சொத்து சேர்த்தனர்
இன்று சசிகலா, தினகரனை மற்றும் அவர்கள் குடும்பத்தை ஒதுக்கிவைக்கும் முடிவு சொல்லும் எல்லோருமே மனசாட்சி படி சொல்லுங்கள்.
அந்தக் குடும்பம் இல்லாமல் 'நான் கார் வாங்கினேன், பொருள் வாங்கினேன், தோப்பு வாங்கினேன்' என்று.

சத்தியம் பண்ணுங்க
அவர்களை ஒதுக்கி வைக்க சொல்லுபவர்கள், சசிகலா இல்லாமல் நான் சொத்து வாங்கினேன் என்று அவரவர் குழந்தைகளை பிள்ளைகளை கீழே போட்டு அவங்க மீது சத்தியம் பண்ணுங்க.. பார்ப்போம். நானும் சத்தியம் பண்றேன். எல்லாமே அவங்க மூலம்தான் வந்தது. அப்படி வந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு கட்சிக்கு கொடுத்துவிட்டு அதிமுகவை காப்பாற்ற வாங்க பார்ப்போம்.

ராஜதந்திரமா?
இப்போது அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது என்பது ஒரு ராஜ தந்திர முயற்சி. அவ்வளவுதான். அதுக்காக சசிகலா குடும்பம் இல்லாமல் அதிமுக இல்லைங்க. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் பலர் கட்சியைவிட்டு போனபோது, சசிகலா குடும்பம் தானே ஜெயலலிதா கூட இருந்து கட்சியை காப்பாற்றியது என்று கொந்தளித்தார் நாகராஜன்.

ஒருமையில் பேசினார்
இடையிடையே கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் பேசி, பக்கத்தில் இருந்த நபர்களை அதட்டியபடியும் பேட்டியளித்தார் எம்பி நாகராஜன்.












Click it and Unblock the Notifications