''புஸ்ஸ்ஸ்ஸ்''..தி.மு.க. செயற்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் உட்பட 12 தீர்மானங்கள்தான்!
சென்னை: தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. தலைமை செயற்குழுவானது பரபரப்பான அறிவிப்புகள் ஏதுமின்றி வழக்கமான மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் போன்ற 12 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியுள்ளது.

தி.மு.க.வின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமக்கு இனி முதல்வராகும் ஆசை இல்லை என்று கருணாநிதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இன்றைய கூட்டத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்ட வியூகங்கள்தான் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் என்பது உள்ளிட்ட 12 வழக்கமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் கடைசி மாநிலமாக இறங்கி விட்ட தமிழகம், மத நல்லிணக்கமும் - பா.ஜ.க. நிலையும், அ.திமு.க. பேரவை"யாகி விட்ட சட்டப் பேரவை, திருவரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி, சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம், ஒழுங்கு நிலை, அதிபர் மாறியும், மீனவர்கள் மீது மாறாத அட்டூழியங்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலை, பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், காவேரி மேலாண்மை வாரியம் உடனேஅமைக்கப்பட வேண்டும், மத்திய அரசு கொண்டுவரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 2014ஐ கைவிடுக, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெறுக, கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை கொடுத்திடுக ஆகிய தலைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வழக்கமான 'ஜனநாயக' கடமையை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இன்றைய தி.மு.க. செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதையே தீர்மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications