சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்... பிரமாண்ட ஏற்பாடுகள்- பலத்த பாதுகாப்பு!
சென்னை: ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச முதலீடுகளை தமிழகத்துக்கு அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, "சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு" தமிழக அரசு சார்பில் நாளையும் நாளை மறுநாளும் நடத்தப்பட உள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான அளவில் செய்யப்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வருவார்கள் என்பது தமிழக அரசின் எதிர்பார்ப்பு. இந்த முதலீட்டாளர்களை வரவேற்கவும் தமிழகத்தின் பெருமைகளை எடுத்துக் கூறவும் சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

ஸ்பெஷல் ஆப்ஸ்
மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள், கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் ஆகியோர் பதிவு செய்தபோதே, அவர்களுக்கான தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், கட்டணங்கள் குறித்த தகவல்கள் பிரத்யேக ஆப்ஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிரமமின்றி மாநாட்டு வளாகத்துக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூய்மையான சென்னை
2 நாட்களிலும் 10 ஆயிரம் பேர் பங்குபெறும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வர்த்தக மையம் அருகில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்பணிகள் காரணமாக குறுகலாக மாறிய சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு தூய்மையாக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் சாலைகள் முழுவதும் முதலீட்டாளர் மாநாடு குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் திரை..
சென்னை மெரீனா கடற்கரையில் காமராஜர் சிலை பின்புறம் தமிழகத்தின் புராதன சின்னங்கள், முக்கிய சுற்றுலா தலங்கள், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும், வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப பிரம்மாண்டமான புரஜக்டர் டூம் அமைக்கப்பட்டு உள்ளது. அடையாறில் தண்ணீர் திரை அமைக்கப்பட்டு லேசர் ஒளி மூலம் ஒலி - ஒளி காட்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் நாள்
மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வரவேற்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவில் உள்ள ஒருவர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசுகிறார். தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் நன்றி தெரிவிக்கிறார்.

கருத்தரங்குகள்
தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், பிற்பகலில் இருந்து கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணிக்கு கருத்தரங்குகள் தொடங்குகின்றன. மொத்தம் 8 அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாளை மறுநாள்...
முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 2-ம் நாள் காலையிலேயே கருத்தரங்குகள் நடைபெறும். நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு கருத்தரங்குகள் தொடங்கி முற்பகல் 11.30 மணி வரை நடைபெறுகின்றன. இவையும் 8 தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன. நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் கருத்தரங்குகள் மாலை 3.15 மணி வரை நடைபெறும்.

நிறைவு நாள்...
மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடு வர உள்ளன- எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்ற விவரத்தை நிறைவுநாளில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்.

2 ஆயிரம் அறைகள்..
மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2,000 அறைகள் அவர்களுக்கென முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் சுற்றுலா
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக குடும்பத்தினருடன் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் மாமல்லபுரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பாரம்பரிய இடங்களைக் கண்டு ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சிகள்
இம்மாநாட்டில் 191 பெரு, சிறு நிறுவனங்களின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரு, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அளிக்கும் 25 பொதுத்துறை, தனியார் வங்கிகளும் அரங்குகளை அமைத்துள்ளன.

இணைந்த நாடுகள்
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தாலும் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இணைந்து இந்த மாநாட்டில் பங்கு கொள்கின்றன.
இந்த மாநாட்டில் தமிழக அரசின் தொழில் வழிகாட்டிக் குழுவும், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை அமைப்புகளும், கனடா- இந்தியா தொழில் கவுன்சில், இந்தோ- அமெரிக்க வர்த்தக சபை, இத்தாலி வர்த்தக ஏஜென்சி, பிரிட்டன்- இந்தியா வர்த்தக கவுன்சில், அமெரிக்கா- இந்தியா வர்த்தக கவுன்சில் போன்ற பன்னாட்டு தொழில் அமைப்புகளும் இணைந்துள்ளன. சர்வதேச அளவிலான இம்மாநாட்டை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications