ஜெயலலிதா உடல் நிலை.. உண்மை நிலவரத்தை வெளிக் கொண்டு வரும் பொறுப்பு யாருக்கு?
சென்னை: ஜெயலலிதா உடல் நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி சந்தேகங்கள் எழுப்பியுள்ள நிலையில், இதில் யார் பொறுப்பேற்று குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒரு வாரம் தாண்டிவிட்டது. அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றபோதிலும், காவிரி தொடர்பாக அவர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட போட்டோவும் வெளியாகாதது எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதியை அறிக்கை வெளியிடும் அளவுக்கு தூண்டியது.
இந்த குழப்பத்திற்கு தீர்வு என்ன, இந்த இக்கட்டான சூழ்நிலையில், யார் பொறுப்பை முன்நடத்த வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் 'ஒன்இந்தியா' கருத்து கேட்டது. அதுகுறித்த ஒரு பார்வை இதோ:

கருணாநிதி குற்றச்சாட்டு
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மீடியா ஒன்றின் செய்தியை சுட்டிக் காட்டி, தமிழக அரசு சசிகலா, ஷீலா பாலகிருஷ்ணன் போன்றோரால் நடத்தப்பட்டுவருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக தரப்பிலோ, ஜெயலலிதாதான், முதல்வர் பணியையாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்
இதுபோன்ற குழப்பமான சூழ்நிலையில், ஆளுநர் தலையீடு அவசியம். அவர் விசாரணை நடத்தி, நிழல் ஆட்சி நடக்கிறதா, நிஜ ஆட்சி நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நிழல் ஆட்சி நடப்பதாக தெரியவந்தால், குடியரசு தலைவருக்கு அதுகுறித்து ஆளுநர் அறிக்கை அளிக்க வேண்டும்.

அடுத்த இடத்தில் உள்ளவருக்கு பொறுப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செயல்படாமல், நிழல் அரசு செயல்பட்டால் அது, சட்ட விரோதம் என்பதால், அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான ஆளுநர் அதை அனுமதிக்க கூடாது என்பது விதிமுறை. எனவே முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ளவரை அரசின் பொறுப்பை ஏற்க ஆளுநர் அறிவுரை கூற வேண்டும்.

ஆலோசகர் மட்டுமே ஆளுநர்
இந்த நிலைமையில், ஆளுநரின் வேலை இதுபோன்ற சட்ட அறிவுரைகளை வழங்குவது மட்டுமே. சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி அரசை கலைப்பது என்பது இரண்டாவது ஆப்ஷன்தான். ஜெயலலிதாவுக்கு தீவிர ஓய்வு தேவை எனும்பட்சத்தில், அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் முதல்வர் பணியை பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரே நம்பிக்கை
பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அவரது பணியை பார்ப்பது அவசியம். அதைப்போன்ற மாற்று ஏற்பாடு இதுவாகும். ஆனால், அதற்கும் வழியில்லை என்றால்தான், ஆளுநர் பரிந்துரையை ஏற்று, ஆட்சியை கலைக்கும் முடிவுக்கு ஜனாதிபதி செல்வார். எனவே குழப்பத்தை தீர்க்க ஆளுநர் ஒருவரே இப்போது தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை. இவ்வாறு சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications