அமித்ஷா சொன்ன அந்த ஒரு மேட்டர்.. “பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்”.. அதிர்ந்து போன எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2026 சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதுரையில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மீண்டும் பேசி இருப்பது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியிருந்த நிலையில் அமித் ஷாவின் இந்தப் பேச்சு அதிமுகவிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Amit Shah s Statement on BJP-AIADMK Alliance Forming Govt in 2026 Sparks Political Debate

மதுரையில் அமித் ஷா பங்கேற்ற கூட்டம்

மதுரை ஒத்தக்கடையில் நேற்று மாலை நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் சுமார் 45 நிமிடங்கள் பேசினார் அமித் ஷா.

வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், 2026ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித்ஷா மீண்டும் உறுதியாகப் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026ல் பாஜக - அதிமுக அரசு

அமித் ஷா பேசுகையில், "ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதை சிறப்பாக நடத்தி தர வேண்டும். மதுரை மண், பல மாற்றங்களுக்கு வித்திட்ட மண். இந்த கூட்டமும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். திமுக ஆட்சியைக் கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக அரசு அமையப்போகிறது.

என் சிந்தனை தமிழ்நாடு தான்

நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் என் காதுகளும், என் சிந்தனைகளும் தமிழகம் மீது தான் இருக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலின், 'அமித்ஷா வந்தாலும், திமுகவை தோற்கடிக்க முடியாது' என்கிறார். அவருக்குச் சொல்கிறேன். அமித்ஷாவால் உங்களை தோற்கடிக்க முடியாது என்பது சரிதான். தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில், தமிழக மக்கள் திமுகவை துாக்கி வீசி எறிவார்கள்.

தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தல், ஒவ்வொரு பாஜக தொண்டர்களுக்கும் முக்கியமான களமாகும். 2024 ஆம் ஆண்டும் முக்கியமான ஆண்டு தான். அப்போது தான் மோடி, 3வது முறையாக பிரதமரானார். ஒடிசாவில் முழு பலத்துடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஹரியானாவில் மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்தது. மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2025ல் டெல்லியில், 27 ஆண்டுக்கு பின் பாஜக ஆட்சி ஏற்பட்டது.

டெல்லியைப் போல தமிழ்நாட்டில்

டெல்லியை போல, 2026ல் தமிழகத்திலும் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி மலரும். மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு, ஏழை மக்களுக்கு கொடுக்கும் பணத்தை மடை மாற்றி அவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்கின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால், மக்கள் வாழ முடியாத சூழலில் தவிக்கின்றனர்.

மத்திய அரசு திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. டாஸ்மாக்கில், 35,750 கோடி ரூபாய் ஊழல் செய்து, சட்டவிரோத ஆட்சியை திமுக நடத்துகிறது. தமிழகத்தில் நுாற்றுக்கு நுாறு விழுக்காடு தோல்வியடைந்த அரசாக திமுக அரசு காட்சியளிக்கிறது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகின்றனர். திமுகவிற்கு தைரியம் இருந்தால் தேர்தல் வாக்குறுதி பட்டியலை எடுத்து வாருங்கள். அதில், எத்தனை வாக்குறுதியை நிறைவேற்றினீர்கள் என்று விவாதிப்போம்.

சிந்தனை, செயல் எல்லாமே

தமிழகத்தில் ஊழல் மட்டுமல்ல, கள்ளச்சாராயத்தாலும் மக்கள் உயிரிழந்துள்ளனர். தென்தமிழகத்தில் ஜாதி, பிரிவினைவாத அரசியல் செய்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கனவாகி விட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகுறித்து எல்லாம் கவலையோ, அக்கறையோ இல்லை.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என கூறும் தைரியம் திமுகவிற்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை இதுபோல் அரசியல், பிரிவினை செய்து ஆட்சி நடத்துகிறது. ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதில் ஒற்றுமை, வலிமையை காட்ட வேண்டும். வரும் தேர்தலில் பாஜக தொண்டர்களின் சிந்தனை, செயல் எல்லாமே திமுக ஆட்சியை எப்போது அகற்றப் போகிறோம் என்று தான் இருக்க வேண்டும்." என அமித்ஷா பேசினார்.

முன்பு எடப்பாடி சொன்னது

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த போது, தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றார்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் பேசி அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

கூட்டணி ஆட்சி இதுவரை இல்லை

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. கூட்டணி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருந்தாலும், அமைச்சரவையில் இடம்பெற்றதில்லை. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தமிழ்நாட்டில் இதுவரை யாரும் கூட்டணி ஆட்சி அமைத்தது இல்லை.

2006ல் கருணாநிதி

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அரியணை ஏறியது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக வென்ற தொகுதிகள் 96 மட்டுமே. ஆட்சி அமைக்க மேலும் 22 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி கூறியதால் 2011ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முதல்வராக ஆட்சியை நிறைவு செய்தார் அப்போதைய மறைந்த முதல்வர் மு.கருணாநிதி.

விஜய் பேச்சுக்கு பிறகு

தேர்தலில் வென்றால் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சியில் பங்கு என்று மாநாட்டில் பேசி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அவ்வப்போது கூட்டணி ஆட்சி பற்றி குரல் எழுப்பி இருந்தாலும் விஜய்யின் பேச்சுக்கு பிறகு இந்த விவகாரம் தீவிரமடைந்தது.

இந்த சூழ்நிலையில்தான் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நாளில் இருந்தே தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்று கூறி வருகிறார் அமித்ஷா. அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனித்த ஆட்சி அமையும் என்று பதில் அளித்து வருகிறார். அதிமுக எம்.பி தம்பிதுரை உள்ளிட்ட தலைவர்களும் அவ்வாறே கூறி இருந்தனர்.

தீவிரமாக எழுந்த குரல்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது நல்லதுதான் 2026ல் அதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி ஆட்சி பற்றிப் பேசி வருகிறார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான் பாண்டியனும், ஆட்சியில் பங்கு கேட்போம் எனக் கூறியுள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற முழக்கங்கள் தீவிரமாக எழுந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+