இது என்ன புதுசா.. அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு சான்ஸ்? எடப்பாடி சொன்ன பதில்!
மயிலாடுதுறை: 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைய உள்ள மெகா கூட்டணி, அமமுக இடம்பெறுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சீர்காழி பகுதியில் சுமார் 53 செ.மீ. மழை பெய்துள்ளது. ஓரிரு நாளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிற்கள் வெள்ள நீரால் அதிகளவில் சேதமாகியுள்ளது.

ரூ.30 ஆயிரம் இழப்பீடு
அதனால் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கனமழை காரணமாக இப்பகுதி மக்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திமுக பார்வையிடவில்லை
தொடர்ந்து, கனமழை பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் மக்களின் மகிழ்ச்சி காணாமல் போனது. திமுக அரசு சேதமடைந்த பகுதிகளை சரியாக பார்வையிட்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிகாரிகளும் பார்வையிட இல்லை. இது வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.

அதிமுக, பாஜக தனித்தனி கட்சி
பின்னர் பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அதிமுக, பாஜக தனித்தனி கட்சிகள். அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக தேசிய கட்சியாக உள்ளது. எப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தாலும், எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்கவில்லை என்று செய்தியாகிறது.

அமமுகவுக்கு வாய்ப்பு?
எங்கள் கட்சி வேறு, அவர்கள் கட்சி வேறு. அரசு நிகழ்ச்சிக்காக வந்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சந்திக்கலாம். 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அது தேர்தல் வரும்போது அறிவிப்போம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அமமுக - அதிமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்விக்கு, டிடிவி தினகரனின் அமமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications