பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம்தான்! ஐயாதான் எங்களுக்கு எல்லாமே! அன்புமணி
திண்டிவனம்: பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது சகஜம்தான். எங்களுக்கு ஐயாதான் எல்லாமே என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இவர்களுடன் மூத்த நிர்வாகிகளான ஜி.கே.மணி, பாலு, திலகபாமா உள்ளிட்டோர் இருந்தனர்.

பாமக பொதுக் குழு கூட்டம் நேற்றைய தினம் புதுவையில் ஒரு தனியார் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ராமதாஸ், இது என் கட்சி, என் முடிவை ஏற்போர் இருக்கலாம். முடியாதவர்கள் வெளியேறலாம் என தெரிவித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை முதல் அப்பா - மகனுக்கும் இடையே உள்ள மோதல்கள் குறித்து பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தினர்.
அப்போது பாலு, ஜி.கே.மணி, திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனிடையே தன்னால் தனது மாமாவும் தாத்தாவும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என விரும்பிய முகுந்தன், தனது இளைஞரணித் தலைவர் பதவியை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் அன்புமணியும் ராமதாஸும் பேசிக் கொண்டது என்ன என்ற கேள்வி எழுந்தது.
இந்த கூட்டம் முடிந்ததும், அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, அது தொடர்பான போராட்டங்கள், விவசாயிகள் மாநாடு, அதற்கான போராட்டங்கள் எந்தெந்த பகுதிகளில் நடத்தலாம் என்பதை நாங்கள் அனைவரும் குழுவாக விவாதித்தோம்.
2025 ஆம் ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. இதற்கான செயல்திட்டங்கள், போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற தீர்மானம் போட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை எப்படி எடுக்க வேண்டும், 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஐயா தலைமையில் விவாதித்தோம் என்றார் அன்புமணி.
அப்போது செய்தியாளர்கள், நேற்று பொதுக் குழுவில் கோபமாக பேசியது குறித்து என கேட்ட போது அன்புமணி என்ன கோபம்? எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, அப்படிப்பட்ட கட்சியில் பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது எல்லாமே சகஜம். எங்களுக்கு எல்லாமே ஐயாதான் என்றார்.
அப்போது முகுந்தன் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது இது எங்கள் உள்கட்சி பிரச்சினை, இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் உள்கட்சி விவகாரத்தை மற்றவர்கள் பேசக் கூடாது என கூறி கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications