ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து மார்ச் 3-ல் போராட்டம்: அன்புமணி

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கண்டித்து பாமக சார்பில் வருகிற மார்ச் 3-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கண்டித்து பாமக சார்பில் மார்ச் 3-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனங்களை தேர்வு செய்திருக்கும் மத்திய அரசு, அதற்கான ஒப்பந்தத்தை விரைவில் வழங்கவுள்ளது.

மத்திய அரசு துரோகம்

மத்திய அரசு துரோகம்

இந்தியாவை எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காகவே இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற தேசபக்தி போர்வையில் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகவே தோன்றுகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தையும், பாறை எரிவாயு திட்டத்தையும் செயல்படுத்த முயன்று தோல்வியடைந்த மத்திய அரசு, இப்போது ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைகிறது.

விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்

விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்

நெருப்பை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது எரிக்கத் தான் செய்யும் என்பதைப் போல, இத்திட்டத்திற்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நெடுவாசல் கிராமம் வளமான விவசாய நிலங்களைக் கொண்டதாகும். முப்போகம் நெல் விளையும் இந்த பகுதியில் கரும்பு, வாழை போன்ற பணப் பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.

நிலம் கையகப்படுத்தல் பணி

நிலம் கையகப்படுத்தல் பணி

இந்த பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்குடன் கடந்த ஆண்டு இரு விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்திய ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதை சுற்றியுள்ள நிலங்களையும் கையகப்படுத்தி ஆய்வைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மூலமாக அல்லாமல் தனியார் நிறுவனத்தின் மூலமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்கிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு

பொதுமக்களுக்கு பாதிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது அப்பகுதி மக்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் எண்ணை கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து எண்ணெயும், எரிவாயும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், அங்கு வேலை செய்வோருக்கும் உள்ளங்கைகளில் வெடிப்பு, தோல் உரிதல், சுவாசக்கோளாறு போன்றநோய்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

நெடுவாசலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அங்குள்ள மக்களுக்கும் இப்பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற நிலையிலிருந்து எண்ணெய்க் கிணறு என்ற நிலைக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க முடியும்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்தின் தீமைகளை விளக்கி கடந்த 17ஆம் தேதி நான் விரிவான அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உழவர் அமைப்புகளும், பொதுமக்களும், மாணவர்களும் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். மற்றொருபுறம், இன்னும் தொடங்கப்படாத இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முயல்கிறார்.

தமிழக அரசின் மெத்தனம்

தமிழக அரசின் மெத்தனம்

தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இது உருவெடுத்திருக்கும் நிலையில், இது குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு இது வரை அறிவிக்கவில்லை. ஜெயலலிதா பயன்படுத்திய இருக்கையில் அமைந்த மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்திலிருந்து முதலமைச்சர் இன்னும் மீளவில்லை.

சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் பேச்சு

சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் பேச்சு

இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனோ, தமிழகத்திலுள்ள விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; வட்டிக்கு பணம் கொடுத்து வருவாய் ஈட்டுபவர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தியவர். இவர்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்புவதும், மண்குதிரையில் ஏறி அலைகள் நிறைந்த கடலை கடந்து விடலாம் என்று நம்புவதும் ஒன்று தான்.

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெடுவாசல் மற்றும் காரைக்காலில் தொடர் முழக்கப் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுமக்களுக்கு அழைப்பு

பொதுமக்களுக்கு அழைப்பு

நெடுவாசலில் எனது தலைமையில் அறப்போராட்டம் நடைபெறும். காரைக்காலில் நடைபெறும் போராட்டத்திற்கு புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ் தலைமையேற்பார். உழவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டங்களில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+