பெட்ரோமாக்ஸ் வெளிச்சம்.. ஆண்கள் மட்டுமே.. மலைபோல் மட்டன் உருண்டை சோறு! ஆண்டிபட்டி கோவில் கறிவிருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டிபட்டி அருகே ஒரு கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.. அந்தவகையில் இந்த ஆண்டு 120-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. அப்படி என்ன சிறப்பு இந்த வழிபாட்டில் தெரியுமா?

ஆண்டிபட்டி அருகே உள்ள பழமையான சடையாண்டி சாமி கோவிலில் 120 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விசித்திர திருவிழா நடந்துள்ளது.

Theni Andipatti Sadaiyandi Temple Theni Mutton Feast Petromax Light Festival

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத கடைசி வளர்பிறையில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த விழாவில் பங்கேற்க தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

சடையாண்டி சாமியிடம் தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதும் அவர்கள் காணிக்கையாக ஆடுகளை வழங்குவார்கள்.

சடையாண்டி கோவிலில் திருவிழா

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு ஜரூராக ஆரம்பமானது.. இந்த விழாவில் நேர்த்திக்கடனாக செலுத்த பக்தர்கள் 120க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்து வழங்கினர். நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த திருவிழா விடிய விடிய நடைபெற்றது. இந்த விழாவில் எப்போதுமே மின் விளக்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. காலம் காலமாக எந்த முறையில் விழா நடத்தப்பட்டதோ அதேபோல பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

முதலில் சடையாண்டி சாமிக்கு உப்பு மற்றும் சீனி சேர்க்காத பொங்கல் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது. அதன் பிறகு கருப்பு நிற முடி கொண்ட ஆடு முதலில் பலியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் ஒவ்வொன்றாக பலியிடப்பட்டன. பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியில் அசைவ உணவு தயாரானது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்பு

பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்களே ஒன்றாகச் சேர்ந்து பெரிய அடுப்புகளில் சமைக்கிறார்கள்.. மலைபோலக் குவியும் மட்டன் இறைச்சியில் கமகமக்கும் கறி விருந்து விடிய விடிய தயாராகிறது.

இந்தத் திருவிழாவில் பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் கிராமத்து ஐதீகத்தின்படி பெண்களுக்கு அனுமதி கிடையாது. வழிபாட்டு சடங்குகள் முதல் கறி விருந்து வரை அனைத்தையும் ஆண்களே சேர்ந்து நடத்துகின்றனர். விருந்து முடிந்த பிறகு மீதமுள்ள உணவைக்கூட யாரும் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில்லை. கோவில் வளாகத்திலேயே அனைத்து உணவையும் முடித்துவிடுவது இந்த விழாவின் மற்றொரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

விடிய விடிய கறிவிருந்து

அதன்படி நேற்று தயாரிக்கப்பட்ட அசைவ உணவு முதலில் சடையாண்டி சாமிக்கு படையலாக போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கறிவிருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட கறிவிருந்து விழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சடையாண்டி சாமியை தரிசனம் செய்துவிட்டு கறிவிருந்து சாப்பிட்டு சென்றார்கள். பல வருட காலமாகவே முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையிலேய இந்த விழா நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் கிராமத்தில் ஒற்றுமை ஓங்குவதாகவும் விழாவை நடத்திய நாட்டாமைகள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+