அதிமுகவில் விரைவில் ஐக்கியமாகும் அனிதா ராதாகிருஷ்ணன்?
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக திமுக பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அதிமுக வியூகம் வகுத்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அதிருப்தி திமுக நிர்வாகிகளை விறுவிறுவென வளைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது அதிமுக.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக தொடங்கின. ஆனால் தொடங்கிய வேகத்தில் அது முடங்கியும் போனது.

உட்கட்சி தேர்தலில் அதிருப்தி
தற்போது உட்கட்சி தேர்தலில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. உட்கட்சி தேர்தலும் திமுகவின் உட்கட்சி பூசலை பூதாகரமாக வெடிக்க வைத்திருக்கின்றன. இதனால் பல நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

பதில் பொதுக்கூட்டம்
இந்த நிலையில் தமிழக அரசை விமர்சித்து திமுக தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் பொதுக்கூட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் 3 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

திமுக நிர்வாகிகள் வளைப்பு
இதனிடையே திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதற்கான வியூகத்தையும் வகுத்து செயல்படுத்த இருக்கிறதாம்.

முதல் போணி அனிதா
இதில் முதல் போணியாக இருப்பது தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன்தான் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி முரட்டு பக்தர் பெரியசாமியுடன் மல்லு கட்டிக் கொண்டு அரசியல் செய்வதற்கு பதில் அதிமுகவுக்கே போய்விடலாம் என்பது அனிதா ஏற்கெனவே எடுத்த முடிவு.

அனிதாவை சேர்க்க ஜெ. ஒப்புதல்
ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனை மீண்டும் சேர்ப்பதில் அதிமுக தலைமை விருப்பம் இல்லாமல் இருந்ததாம். தற்போது அதிமுக தலைமை அனிதாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துவிட்டதாம்.

பட்டியல் ரெடி..
இதேபோல் உட்கட்சி தேர்தல் மற்றும் ஸ்டாலின் தலைமை ஆகியவற்றால் அதிருப்தியில் இருக்கும் இதர திமுக நிர்வாகிகளையும் பட்டியலெடுத்து வருகிறார்களாம். விரைவில் அடுத்தடுத்து திமுக பிரபலங்கள் சிலர் அதிமுகவில் ஐக்கியமாவது உறுதி என்கின்றன அதிமுக வட்டார தகவல்கள்.












Click it and Unblock the Notifications