அண்ணாவின் வளர்ப்பு மகன் கவுதமன் மரணம்- ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவரான கவுதமன் இன்று அதிகாலை காலமானார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 3வது வளர்ப்பு மகனான கவுதமன், சென்னை செனாய் நகரில் வசித்து வந்தார். திரைப்பட தயாரிப்பு, புத்தக பதிப்பித்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர் கவுதமன்.
கவுதமனின் மனைவி துளசி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தனது ஒரே மகள் சரிதாவின் குடும்பத்துடன் வசித்து வந்தார் கவுதமன்.

இந்நிலையில், மூளையில் ஏற்பட்ட சிறு கட்டியின் காரணமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த கவுதமன், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் அண்ணா நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் - ராஜாத்தி அம்மாள் அஞ்சலி
கவுதமன் மறைவுச் செய்தி கேட்டதும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் சென்று கவுதமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications