நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா இதுவரை அண்ணாமலையை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல் வெளி வந்துள்ளது. அமித்ஷாவை சந்தித்து தனது அடுத்தக்கட்ட திட்டம் மற்றும் பாஜகவில் நிலவி வரும் பிரச்சனை குறித்து பேச அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது முதலே, அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. தற்போது சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான புதியக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள சூழலில், அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கும் முடிவில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.

இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி அல்லது புதிய மக்கள் இயக்கம் தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகும் கடிதத்தை முறைப்படி ஒப்படைக்கவோ அல்லது தனது அடுத்தகட்ட முடிவை விளக்கவோ டெல்லிக்கு அவசரமாகப் பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேச அண்ணாமலைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமித் ஷாவைச் சந்தித்துத் தனது அதிருப்தியைப் பதிவு செய்ய அண்ணாமலை தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அமித் ஷா அலுவலகத்தில் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் தன்னிச்சையான போக்கால் தேசியத் தலைமை அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை டெல்லியில் காத்திருக்கும் இதே வேளையில், அவரது சொந்த மண்டலமான கொங்கு பெல்ட்டில் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தை வழிநடத்த வாருங்கள் தலைவரே!" என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை சமீபத்தில் பகிரங்கமாக எதிர்த்ததில் இருந்தே, அவருக்கும் டெல்லி தலைமைக்கும் இடையேயான விரிசல் உச்சக்கட்டத்தை எட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றாலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அமித் ஷா அல்லது நிதின் நபினுடனான இறுதிச் சந்திப்பிற்குப் பிறகு, ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது அண்ணாமலை தனது புதிய அரசியல் பாதையை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் டெல்லி பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications