மாஜி விபச்சார தரகரை மிரட்டி பணம் பறித்த ஆயுதப்படை ஏட்டு சஸ்பெண்ட்
கோவை: கோவையில் முன்னாள் விபச்சார தரகரை மிரட்டி பணம் பறித்த ஆயுதப்படை ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஹக்கீம். ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அழகுமுத்துபாண்டியன் என்பவருக்கு போன் செய்து விபச்சார வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அழகுமுத்துபாண்டியன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்துள்ளார். அவரை சந்தித்த ஹக்கீம், நீ விபச்சார புரோக்கராக செயல்பட்டதாக புகார் உள்ளது. எனக்கு பணம் கொடுத்தால் அந்த வழக்கில் உன் பெயரை சேர்க்க மாட்டேன். பணம் கொடுக்கவில்லை என்றால் வேறு சில வழக்குகளிலும் உன் பெயரை சேர்த்து உன்னை சிறையில் அடைப்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
அதற்கு அழகுமுத்துபாண்டியன் தான் தற்போது விபச்சார புரோக்கர் தொழிலை விட்டுவிட்டு திருப்பூரில் வேறு தொழில் செய்வதாக தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த ஹக்கீம் அவரை மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து அழகுமுத்துபாண்டியன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பணம் பறித்தது ஆயுதப்படை போலீசான ஹக்கீம் என்பதையும், அவர் பலரை மிரட்டி பணம் பறித்ததையும் தெரிந்து கொண்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஹக்கீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications