ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! அருள் விக்னேஷை கண்டித்து கள்ளக்குறிச்சி இன்று அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலை அருகே அதிமுக மகளிரணியினர் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் அருள் விக்னேஷ். இவர் அந்த மாவட்ட பெண் ஆட்சியருக்கு மதுபோதையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கிடைத்தன. மேலும் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றும் அருள் விக்னேஷ் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முதலில் வெளியே கொண்டு வந்தவர் திமுக எம்பி கனிமொழி.

கனிமொழியை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். "தவெக ஆட்சியில் சாமானிய பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால் ஆட்சியருக்கும் பாதுகாப்பு இல்லையா?" என கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்தார். தொகுதி மக்களின் மனு தொடர்பான விஷயங்களை மட்டுமே ஆட்சியருக்கு பார்வேர்டு செய்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இது குறித்து ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்பியதாகவும், ஆட்சியர், மத்திய அரசுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அருள் விக்னேஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இதுவரை கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் மறுக்கவோ அல்லது ஆம் என்றோ சொல்லவில்லை. இந்த நிலையில் ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று காலை 10 மணிக்கு அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலை அருகே அதிமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
