திமுகவில் மீண்டும் ஐக்கியம்? கருணாநிதியுடன் அழகிரி மீண்டும் சந்திப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரி இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது கருணாநிதியிடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து பெற்றதாக அழகிரி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது திமுக- தேமுதிக கூட்டணி அமைவதைத் தடுத்தவர் மு.க. அழகிரி. பின்னர் மு.க.ஸ்டாலின் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்த கருத்துகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் அழகிரி.

இதனைத் தொடர்ந்து கருணாநிதியை சந்திப்பதை அழகிரி தவிர்த்து வந்தார். சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றாலும் தாய் தயாளு அம்மாளை மட்டுமே அழகிரி சந்தித்து பேசிவந்தார்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் திடீரென கருணாநிதியை அண்மையில் அழகிரி சந்தித்தார். அப்போது, கருணாநிதியிடம் உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார் எனக் கூறப்பட்டது.
தற்போது மீண்டும் கருணாநிதியை அழகிரி சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது தமிழ்ப் புத்தாண்டான சித்திரை திருநாளில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்றுதான் வெளியிடப்பட்ட நிலையில் அழகிரி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து கருணாநிதி- அழகிரி சந்திப்புகள் நடைபெறுவதன் மூலம் மீண்டும் திமுகவில் அவர் ஐக்கியமாகக் கூடும் என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் கருத்து
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி- அழகிரி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்லது; தந்தை- மகன் சந்திப்பு அவ்வளவுதான் என்றார்.












Click it and Unblock the Notifications