லலித் மோடிக்கு ஏன் தடை?... பிசிசிஐ தரும் விளக்கம்!
சென்னை: ஒழுங்கீனம் மற்றும் மிகவும் மோசமான நடத்தை ஆகியவற்றின் காரணமாக லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து நீக்கப்படுவதாகவும், வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று நடந்த பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை...

சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், லலித் குமார் மோடிக்கு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வாரியத்தின் 32 (4) விதிப்படி அனுப்பப்பட்ட விளக்க நோட்டீஸ் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு லலித் குமார் மோடி மீதான புகார்கள் தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையும் தீவிரமாக ஆராயப்பட்டது.
மேலும் செப்டம்பர் 24ம் தேதி அவர் வாரியத்தின் கெளரவச் செயலாளருக்கு எழுதிய கடிதமும் பரிசீலிக்கப்பட்டது. அவர் கொடுத்த ஆவணங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதன் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது -
லலித் மோடி, மோசமான நடத்தை மற்றும் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்படுகிறது. எனவே, வாரியத்தின் விதிகள் மற்றும் முறைப்படுத்தல் சட்டத்தின் 32வது விதியின் கீழ், லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
ஒரு நிர்வாகியாக இனிமேல் அவர் செயல்பட முடியாது. அதற்கான அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் அவர் இழக்கிறார்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் வாரியத்தில் எந்தப் பதவியிலும் அவர் அமர முடியாது. எந்தக் கமிட்டியிலும் உறுப்பினராக முடியாது. வாரியத்தின் எந்த ஒரு உறுப்பினர் பதவியிலும் அவர் அமர முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications