அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ.. ராணிப்பேட்டை போஸ்டரை பாருங்க.. அடக்கொடுமையே
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மத்திய தொழில்பாதுகாப்பு படை பயிற்சி மையத்துக்கு 2 நாள் பயணமாக இன்று அமித்ஷா வருகிறார். அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்று உள்ளதால் பலரும் பாஜகவினரை கிண்டல், விமர்சனம் செய்து வரும் சூழலில் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் பெண் நிர்வாகி மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித்ஷா. இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ளார். அமித்ஷா இன்றும், நாளையும் 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு தான் இன்று அமித்ஷா வருகை தர உள்ளார்.
அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை, அரக்கோண, தக்கோலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமித்ஷாவின் போட்டோவிற்கு பதில் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதில் சந்தானபாரதியின் போட்டோவுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‛‛ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக! என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பாஜகவினர் தாமரை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சார்பில் ஒட்டப்பட்ட வரவேற்பு சுவரொட்டி விளம்பரத்தில் அமித்ஷாவிற்கு பதிலாக இயக்குனர் சந்தானபாரதி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. சதி இருப்பதாக அருள்மொழி பேட்டி@thatsTamil#BJP #Tamilnadu pic.twitter.com/XAiCetTkfJ
— Veerakumar (@Veeru_Journo) March 7, 2025
சின்னம், சிஐஎஸ்எப்பின் சின்னம் உள்ளிட்டவை இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் மற்ற கட்சியினர் பாஜகவினருக்கு அந்த கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட அடையாளம் தெரியவில்லை என்று கிண்டல் மற்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் போஸ்டரில் இடம்பெற்றுள்ள பாஜக நிர்வாகி அருள்மொழி விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அருள்மொழி கூறியதாவது: ‛‛என் பெயர் அருள்மொழி. பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். அமித்ஷா அரக்கோணம் வருவதையொட்டி போஸ்டர் ஒட்டி அவரை அவமானப்படுத்தி உள்ளனர். அதில் என்னுடைய பெயரையும் சேர்த்து அசிங்கப்படுத்தி உள்ளனர்.
இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த போஸ்டரை ஒட்டியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோவை பாஜக போஸ்டரில்ர் இடம்பெற செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு அமித்ஷா வந்தார். அப்போது அவரை வரவேற்க அடிக்கப்பட்ட போஸ்டரில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ என்பது இருந்தது.
மேலும் ஒரு பேட்டியில் கூட நடிகர் சந்தான பாரதி பாஜகவினரை கலாய்த்து இருப்பார். பாஜகவினருக்கு அமித்ஷாவுக்கு பதில் என் போட்டோவை போஸ்டரில் போட்டு வருக.. வருக என ஒட்டியிருந்தனர் என சிரித்தபடி கூறியிருந்தார். தமிழக பாஜகவினரின் இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம் அமித்ஷாவும், நடிகர் சந்தான பாரதிக்கும் இடையே உருவ ஒற்றுமை என்பது உள்ளது. இதனால் தான் குழப்பமடைந்து பாஜகவினர் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோவை பயன்படுத்தி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக பாஜகவினரை குழப்பமடைய செய்யும் இந்த சந்தான பாரதி யார் என்றால் பன்முகதன்மை கொண்ட திரைத்துறை கலைஞர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து விருதுகளை குவித்த குணா, மகாநதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர் தான். இந்த படங்கள் தவிர மேலும் சில படங்களையும் அவர் இயக்கியுள்ளார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications