விஜயகாந்த்துடன் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் திடீர் சந்திப்பு- கூட்டணியில் இணைய அழைப்பு!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களை கட்சிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் சிறிய கட்சிகளுடனான கூட்டணி போதும் என கருதுகிறது.

திமுகவோ, தேமுதிக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என மெகா கூட்டணி அமைய முயற்சிக்கிறது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த அணி தேமுதிக மற்றும் தமாகாவுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது.
பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணி ராமதாஸ்தான் முதல்வர் வேட்பாள்; இதை ஏற்கும் கட்சியுடனே கூட்டணி என அறிவித்துள்ளது. இதனிடையே பாஜகவோ, பாமக மற்றும் தேமுதிகவை எப்படியும் கூட்டணியில் கொண்டுவருவது என்பதில் மும்முரமாக இருக்கிறது.
அதே நேரத்தில் பாமக விட்டுக் கொடுப்பதாக இல்லை என்பதால் தேமுதிகவை எப்படியும் வளைத்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அடுத்தடுத்து விஜயகாந்த்தை பாஜக தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இன்று காலையிலும் கூட விஜயகாந்த்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் சந்தித்து பேசினார். சுமார் 1 மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக இணைந்து போட்டியிட வேண்டும் என அழைப்புவிடுத்தோம் என்றார்.
ஆனால் இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications