தமிழக சட்டசபை தேர்தல்... கூட்டணி சேர முன்வராத கட்சிகள்... 'ஒதுக்கி' வைக்கப்பட்ட பா.ஜ.க.
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர எந்த ஒரு கட்சியும் முன்வராத நிலையில் அக்கட்சி தனித்தே போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் கூட்டணிகள் தெளிவாகி வருகின்றன. ஆளும் அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் சிறிய கட்சிகள் சிலவற்றை சேர்த்துக் கொண்டு அந்த கட்சி வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைக்க இருக்கிறது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிகபட்சம் 8 சீட்டுகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என்ற பார்முலாவை தாண்ட அ.தி.மு.க. மறுத்து வருகிறது.
தி.மு.கவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், தே.மு.தி.க மீது நம்பிக்கையோடு இருக்கிறது. இதில் காங்கிரஸ் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கலாம். தே.மு.தி.கவைப் பொறுத்தவரையில் தனித்து நிற்பது அல்லது த.மா.காவுடன் கூட்டணி என்ற நிலையை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
இருந்தபோதும் எப்படியாவது தே.மு.தி.கவையும் த.மா.காவையும் மக்கள் நலக் கூட்டணிக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் வைகோ தீவிரமாக இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; அதை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என கூறி மாதங்கள் பல உருண்டோடிவிட்டன... ஆனாலும் எந்த கட்சியும் அதை ஏற்று கூட்டணிக்குப் போகவில்லை.
ஆகையால் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக- காங்கிரஸ், தேமுதிக- தமாகா அல்லது மக்கள் நலக் கூட்டணி,. பாமக என களத்தில் நிற்கப் போகும் அணி சேர்க்கை தெளிவாகிக் கொண்டிருக்கிறது.
இந்த கூட்டணி களேபரத்தில் எந்த கட்சியும் திரும்பிப் பார்க்காத ஒரே ஒரு கட்சி பா.ஜ.க.தான். ஆனால் பா.ஜ.கவோ, பா.ம.க, தே.மு.தி.க. எங்களுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்று மூச்சுவிடாமல் சொல்லி வருகிறது... விஜயகாந்தும் கூட நாங்க எந்த கூட்டணியிலும் இல்லை என்று சொன்னாலும் விடாமல் 'நீங்க எங்க அணியில்தான் இருக்கீங்க' என்று இழுத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. தற்போது பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் பா.ஜ.கவை இனிமேலும் எந்த ஒரு கட்சியும் திரும்பியும் பார்க்க விரும்பாத நிலையே தொடரும்.
ஆகையால் பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications